வங்கதேசம் எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம்| ட்ரம்ப் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய யூனுஸ் அரசாங்கம்! பின்னணி என்ன?

வங்கதேசத்தில் வெற்றியைக் கொண்டாடிய டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொண்டுள்ளனர்.

Prakash J

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பண்கள் வேகம்பிடித்து வருகின்றன.

இந்த நிலையில், வங்கதேசத்தில் வெற்றியைக் கொண்டாடிய டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொண்டுள்ளனர்.

வங்கதேசம்

வங்கதேசத்தில் டாக்கா மற்றும் பிற நகரங்களில் அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்பின் உறுதியான வெற்றியைக் கொண்டாடக் கூடியிருந்த பல குழுக்களுக்கு எதிராக வங்கதேச படையினரால் இந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டொனால்டு ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து ட்ரம்புவிற்கு ஆதரவாக மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எவரும் எந்த அரசியல் கட்சியைச் சாராதவர்கள் எனவும், வெறும் சாதாரண குடிமக்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இது வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறையைக் கண்டித்திருந்தார். இந்த கண்டிப்பிற்குப் பிறகே இந்த எதிர்ப்பு நடவடிக்கை வந்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா | பீச்சில் நடக்க முடியாமல் தடுமாறிய ஜோ பைடன்.. உதவிய மனைவி.. #ViralVideo

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவர், அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். என்றாலும், அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் பேசுபொருளானது. அந்நாட்டில் இதைத்தான் டொனால்டு ட்ரம்ப் கண்டித்திருந்தார்.

முகமது யூனுஸ், டொனால்டு ட்ரம்ப்

தற்போதைய வங்கதேச அரசின் தலைவராகக் கருதப்படும் முகமது யூனுஸ், அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகத்தின் நண்பராக கருதப்படுகிறார். யூனுஸ், இந்தப் பதவிக்கு வருவதற்கு ஜோ பைடன் அரசாங்கம் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. இதை, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா முன்னரே உறுதிப்படுத்தியிருந்தார். அந்த வகையில், இனி முகமது யூனுஸுக்கு ட்ரம்பின் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில்தான் யூனுஸ் அரசு, வங்கதேசத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியுள்ளது.

இதையும் படிக்க: லெபனானில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர்கள்.. தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!