ஸ்டார்பக்ஸ், லக்‌ஷமன் நரசிம்மன் X pages
உலகம்

“6 மணிக்கு மேல் வேலை பார்க்க மாட்டேன்” - என்ற ஸ்டார்பக்ஸ் CEO பணி நீக்கம்... காரணம் என்ன?

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த லக்‌ஷமன் நரசிம்மன் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக அமெரிக்காவின் பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Prakash J

சீனாவில் சந்தை நிலைமை சரியாக இல்லாததால், அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு போட்டியாகப் பல நவீன மற்றும் புதுமையான உள்நாட்டு காபி பிராண்டுகள் வந்துள்ளன. இதனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த லக்‌ஷமன் நரசிம்மன் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக அமெரிக்காவின் பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காரணம் தெரிவித்துள்ள ஸ்டார்பக்ஸ், “அண்மைக் காலங்களில் நிகழும் தொடரும் விற்பனைச் சரிவுகளால், வணிகத்தைத் திருப்புவதற்காக அழுத்தம் கொடுக்கும் சூழலில் நிறுவனம் உள்ளது. அதன் காரணமாகவே தலைமை நிர்வாக அதிகாரியைப் பணிநீக்கம் செய்யப்பட்டு, வேறொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், உண்மையில் குறைவான நுகர்வோர், சீனாவில் உள்ள கடினமான சந்தை நிலைமைகள் ஆகியவைதான் ஸ்டார்பக்ஸின் தலைமை மாற்றப் பிரச்னைகளுக்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், லக்‌ஷமன் நரசிம்மனின் உண்மையான பணி நீக்க காரணத்தை ஸ்டார்பக்ஸ் தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க: வினேஷ் போகத் வழக்கு| மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது ஏன்? விளக்கம் தந்த வழக்கறிஞர்!

இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் முழுதாக 2 வருடங்கள்கூட முடியாத நிலையில் லக்‌ஷமன் நரசிம்மன் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது. முன்னதாக, லக்‌ஷமன் நரசிம்மன் கடந்த மாதம் அளித்த பேட்டியொன்றில், “நான் எப்போதும் மாலை 6 மணிக்குமேல் பணிபுரிய மாட்டேன்; அதற்குள்ளாகவே, அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவேன்’’ எனத் தெரிவித்திருந்தார். இந்த பேட்டியால்தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

லக்‌ஷமன் நரசிம்மன்

கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு பல நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அதனால், நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது கேள்விப்பட்ட ஒன்றாகவே உள்ளது. என்றாலும், அமெரிக்காவில் சில பிரபல நிறுவனங்களின் சிஇஓக்கள் கடந்த சில காலங்களில் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவது பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிக்க: இமானே கெலிஃப் பாலினம் குறித்த கருத்து| எலான் மஸ்க், ட்ரம்ப் பெயர்கள் வழக்கில் சேர்ப்பு!

Russell 3000 Index (ரஸ்ஸல் 3000 என்பது ஒரு பங்குச்சந்தைக் குறியீடாகும், இது சந்தை மூலதனத்தின் அளவுகோல்களின் அடிப்படையில் அமெரிக்காவில் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் முதல் 3,000 நிறுவனங்களை தரவரிசைப்படுத்துகிறது) உள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைக் கண்காணிக்கும் ஆய்வு நிறுவனமான எக்ஸ்சேஞ்ச்.காம் வெளியிட்ட தகவல்களின்படி, நடப்பு ஆண்டில் இதுவரை 191 தலைமை நிர்வாக அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். இதில், 74 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது பதவி விலகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என அது தெரிவித்துள்ளது.

அந்த வகையில், லக்‌ஷ்மன் நரசிம்மன் பெயரையும் எக்ஸ்சேஞ்ச்.காம் தங்களது பட்டியலில் சேர்த்துள்ளது. பணிநீக்கம் குறித்து எக்ஸ்சேஞ்ச்.காம் நிறுவனர் டேனியல் ஷாபர், "வேகமாக மாறிவரும் சந்தை சூழலில், நல்ல செயல்பாட்டைக் காட்டாத தலைமை நிர்வாக அதிகாரிகள் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்’| மருத்துவர் கொலைக்கு எதிரான போராட்டத்தில் குதித்த ஆளும்கட்சி எம்பி!