பாக்டீரியா கூகுள்
உலகம்

ஜப்பான் | வேகமாக பரவி வரும் சதைகளை தின்றும் பாக்டீரியா; அறிகுறிகள் என்னென்ன?

Jayashree A

கொரோனா வைரஸ் தொற்றானது உலகிலிருந்து முழுவதுமாக விடுபடாத நிலையில், அடுத்த அபாயமான பாக்டீரியா தொற்றானது ஜப்பானில் வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பாக்டீரியாவிற்கு ஸ்ட்ரெப்டோக்கால் (steptococcal) என்று பெயர். இது, steptococcal toxic shock syndrome (STSS) வகையை சார்ந்தது. இந்த பாக்டீரியாவால் தாக்கப்பட்ட ஒருவருக்கு, 48 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தவகை பாக்டீரியா மனிதனின் தொண்டையை தாக்கும். பிறகு உடல் முழுவதும் வேகமாக பரவி உயிரையே எடுக்கும் என்கிறார்கள். இந்த நோயானது சமீபத்தில் ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பதிவாகி உள்ளதாக கூறுகிறார்கள். இந்த நோய் தாக்கப்பட்ட 100 பேரில் 30 பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நோய் கண்காணிப்பு

1999 ம் ஆண்டுமுதல் தொற்று நோய்கள் பரவலைக் கண்டறியும் தேசிய நிறுவனம் இந்த பாக்டீரியாவை கண்காணித்து வருகிறது.

பாக்டீரியாவின் தாக்கம் எப்படி இருக்கும்?

streptococcal பாக்டீரியாக்கள் மனித தோல் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று தொண்டையை தாக்கும். பிறகு மனித உடலில் சூப்பர் ஆண்டிஜென் திறன் கொண்ட சில நச்சுக்களை உடலில் உருவாக்கும். அதன் பிறகு விரைவாக திசுகளை தின்று உறுப்புக்களை செயலிழக்கச்செய்து மனிதனை 48 மணிநேரத்திற்குள்ளாக மரணமடையச்செய்யும் என்கிறார்கள்.

ஆகவே இதனை ’சதைகளை தின்றும் பாக்டீரியா’ என்றும் கூறுகின்றனர்.

இந்தவகை பாக்டீரியாக்கள், எந்த வயதினரையும் தாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. அதிலும் குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள், உடல் உபாதை உடையவர்கள் ஆகியோரை விரைவில் தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி வரை ஜப்பானில் 977 பேருக்கு இந்த நோய் தாக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது சென்ற ஆண்டைவிட அதிகம் என்கிறார்கள். பிறநாடுகளின் எண்ணிக்கை தெரியவரவில்லை.

இந்நோயின் அறிகுறி

தொண்டைவலி

கை கால்கள் வலி,

உடல் சோர்வு,

காய்ச்சல்,

சுவாச கோளாறு

போன்ற அடிப்படையான அறிகுறியாக இருந்தாலும், இந்நோய் தாக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள்ளாக உடல் முழுதும் பரவி மரணத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். குறிப்பாக தொண்டைப்புண் இதன் ஆரம்ப அறிகுறியாக உள்ளது என்கிறார்கள்.

தடுக்கும்முறை

இதில் ஆறுதல் தரும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்தவகை பாக்டீரியாக்கள் நேரடியாக மனிதனுக்கு மனிதன் பரவும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள். நோய் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வதுடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆண்டிபயாடிக்ஸ் மாத்திரைகள எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதனால் நோயிலிருந்து குணமடையலாம். மேலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை, அடிக்கடி கை கால்களை சுத்தம் செய்துக்கொள்வதாலும், சுத்தமான சுகாதரமான உணவு எடுத்துக்கொள்வதாலும் பாக்டீரியாவை தடுக்கலாம்.

இந்தியாவில் இந்த வகை பாக்டீரியாவின் தாக்கம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி என்றாலும், வருமுன் காப்பது ஒவ்வொருத்தரின் கடமையாகும்.