உக்ரைனில் நான்கு பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யப் படைகள் அறிவித்துள்ளன. அதேநேரத்தில், ரஷ்ய வீரர்கள் நான்காயிரத்து 300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யப்படை. உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் கெர்சான், பெர்டியான்ஸ்க், கெனிஷெஸ்க், செர்னோபேவ்கா ஆகிய 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யப் படைகள் அறிவித்துள்ளன. உக்ரைன் வீரர்கள் 471 பேர் தங்களிடம் சரணடைந்து விட்டதாகவும், அவர்களை உரிய மரியாதையோடு நடத்தி, தேவையான உதவிகளை செய்ய உள்ளதாகவும் ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் படைகளின் ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யப் படைகள் அறிவித்துள்ளன. இவை ஒருபுறம் இருக்க, போரில் நான்காயிரத்து 300 ரஷ்ய வீரர்கள் கொல்லப் பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஹன்னா மலயார் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின்146 டாங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்களை அழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 706 ஆயுதம் தாங்கிய வாகனங்கள், 49 பீரங்கிகள், ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் ஆயுத வாகனங்கள் நான்கு, படகுகள் 2, ட்ரோன்கள் 2, வாகனங்கள் 30 என போரில் தாங்கள் வீழ்த்தியவற்றின் பட்டியலை ஹன்னா மலயார் வெளியிட்டுள்ளார்.