உலகம்

மம்மியின் சிதையை ஆராய்ந்த போலந்து ஆய்வாளர்கள் அதிர்ச்சி: மிரளவைக்கும் தகவல்கள் இதோ!

மம்மியின் சிதையை ஆராய்ந்த போலந்து ஆய்வாளர்கள் அதிர்ச்சி: மிரளவைக்கும் தகவல்கள் இதோ!

JananiGovindhan

எகிப்தில் புதைக்கப்பட்ட மம்மிக்களின் சிதைகளை எடுத்து உலகின் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் பலரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், போலந்து நாட்டைச் சேர்ந்த வார்சா மம்மி புராஜெக்ட் என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று பண்டைய காலத்து சடலம் ஒன்றின் மண்டை ஓட்டை ஸ்கேன் மூலம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.

அதில், அந்த மண்டை ஓட்டில் வழக்கத்துக்கு மாறான ஒரு அடையாளம் இருந்ததும், இதுபோக அந்த மண்டை ஓட்டை ஆய்வு செய்ததில் அந்த நபர் நாசோபார்னீஜியல் என்ற புற்றுநோயால் இறந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது.

அந்த எகிப்திய மம்மியியை மிஸ்ட்ரீயஸ் லேடி என்றும் அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள். அந்த மம்மிதான் மூக்கில் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்திருக்கிறது.

நாசோபார்னீஜியல் புற்றுநோய் தொண்டையை இணைக்கும் மூக்கின் பின்புறம் மற்றும் வாய்ப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று என வார்சாவின் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புற்றுநோயியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ரஃபால் ஸ்டெக் கூறியிருக்கிறார்.

மம்மிக்கள் தொடர்பான பல ஆய்வுக்கூறுகள் ஆராய்ச்சியாளர்களையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், 2000 ஆண்டு பழமையான மம்மி சிதையில் புற்றுநோய் இருந்தது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மம்மி கர்ப்பிணியாக இருந்தபோது இறந்திருக்கிறார் என்பதில் கூடுதல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது எனவும் அந்த பேராசிரியர் கூறியிருக்கிறார்.

மேலும் அந்த கர்ப்பிணி மம்மியின் மண்டை ஓட்டின் மூலம் கண்டறியப்பட்ட புற்றுநோய் மற்ற மம்மிக்களோடு ஒப்பிட்டு திசு பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே முற்றிலும் என்ன மாதிரியான நோய் என்பது தெரிய வரும் எனவும் வார்சா மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.