கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் மிகவும் வேகமாக உருகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்தில் பனிப்பாறைகளில் இருந்து பனி உருகும் அளவு, வேகம் குறித்த அளவீடுகளை செயற்கைக்கோள் தரவுகளை கொண்டு ஆராயப்பட்டது.
2000-ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் உருகும் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பில்லியன் டன் அளவுள்ள பனிப்பாறைகளை இழந்து வருகிறோம். பனிக்கட்டி மீண்டும் உருவாகுவதைவிட பனி உருகுவது விரைவாக நடக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த செயற்கைக்கோள்கள் அளித்த தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.
1985 முதல் கிரீன்லாந்து முழுவதும் பெரிய பனிப்பாறைகள் 3 கிலோமீட்டர் பின்வாங்கி பல பில்லியன் டன் அளவிலான பனியை இழந்துள்ளது. கிரீன்லாந்தை பொறுத்தவரை அதிகமான பனிப்பாறைகள் கடல் நீருடன் தொடர்புச் சங்கிலி கொண்டுள்ளன. சூடான கடல் நீர் பனிப்பாறையை உருகச் செய்கிறது. இதனால் பனிப்பாறைகள் அவற்றின் முந்தைய நிலைகளுக்கு மீண்டும் வளர கடினமாக உள்ளது. அதிசயமாக புவி வெப்பமடைதல் நிறுத்தப்பட்டாலும், பனிப்படலங்கள் மிக வேகமாக கரைந்து வருவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் சுருங்குவது முழு உலகத்திற்கும் ஒரு பிரச்சினையாகும். கிரீன்லாந்தின் பனிக்கட்டிகளிலிருந்து உருகும் அல்லது உடைந்த பனி அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. இதனால் பெருங்கடல்கள் அனைத்தும் கடல் நீர் மட்டம் உயர்வுக்கு உள்ளாகியுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் கடல் மட்டம் 2.2 மில்லிமீட்டர் வரை உயரக்கூடும்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.