மத்திய கிழக்கு நாடுகள் முகநூல்
உலகம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம்! உலக நாடுகள் அச்சத்திலிருப்பது ஏன்?பின்னணி?

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அச்சத்தின் பின்னணி என்ன.

PT WEB

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அச்சத்தின் பின்னணி என்ன...

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்... இந்த பழமொழி இந்த நவீன காலத்திற்கும் பொருந்துகிறது. மத்திய கிழக்கு ஆசியா என்பது உலகின் சிறிய நிலப்பரப்பு. ஆனால் இங்கு சூழ்ந்துள்ள போர் மேகங்கள் உலகையே கவலை கொள்ள செய்துள்ளன. இங்கு உற்பத்தியாகும் கச்சா எண்ணெயின் அளவு குறைந்தாலோ அல்லது உற்பத்தி பாதிக்கப்பட்டாலோ அது பல நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கும்.

ஈரானை ஒட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பகுதி நடக்கிறது. இந்த நீரிணை மூடப்பட்டாலோ அல்லது தாக்கப்பட்டாலோ பல நாடுகளின் இயக்கமே ஸ்தம்பித்துவிடும். எனவேதான், மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பது பல நாடுகளின் விருப்பம்.

குறிப்பாக மத்திய கிழக்கு பதற்றங்கள் இந்தியாவை வெகுவாகவே பாதிக்கும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு 85 சதவீதத்தை வெளிநாடுகளையே சார்ந்துள்ளது. அதிலும் 55% கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்து மட்டுமே வருகிறது. மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு 10 டாலரும் அதிகரிக்கும்போது இந்தியாவில் உற்பத்திச்செலவு அதிகரிப்பு, சரக்கு போக்குவரத்து செலவு என்ற வகையில் விலைவாசி அதாவது பணவீக்கம் 0.3% அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சி 0.15% குறைகிறது.

இப்படி ஒரு கணக்கீட்டை தெரிவிக்கின்றன ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்கள். சாமானிய மக்களுக்கு விலைவாசி உயர்வு வடிவில் பாதிப்பு ஏற்படும் நிலையில் மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை என்ற பெயர்களில் பொருளாதார தலைவலிகளும் ஏற்படுகின்றன.

இதன் எதிரொலியாக பங்குச்சந்தை சரிவுகளும் முதலீட்டாளர்களை பதம் பார்க்கின்றன..இவை ஒரு புறம் என்றால் சீனாவின் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேடிவ் (BELT AND ROAD) சவால் விடும் வகையில் உருவாக்கப்படும் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா சரக்கு போக்குவரத்து வழித்தடத்திட்டமும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7ல் இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதிலிருந்து தொடங்கிய பதற்றம் தற்போது வரை தணியவில்லை. மோதல்கள் முடிவுக்கு வருமா...என எதிர்பார்ப்பது உலக நாடுகளின் அரசுகள் மட்டுமல்ல.. சாமானியர்களும்தான்!