இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட ஜக்ரான் ஹசிம் நட்சத்திர விடுதி குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக அதிபர் சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களையும், அவர்களது பெயர்களையும் பொதுமக்களின் பார்வைக்கு அந்நாட்டு காவல்துறை நேற்று வெளியிட்டது. இதில், மூன்று பெண்களும் இடம்பெற்றனர். அவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வசதியாக மூன்று தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட இஸ்லாமிய மதகுரு ஜக்ரான் ஹசிம் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக அதிபர் சிறிசேன கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டரின் போது நடந்த குண்டுவெடிப்பில் ஜக்ரான் ஹசிம் இறந்துவிட்டார். ஷங்கரி லா நட்சத்திர விடுதியில் நடந்த குண்டுவெடிப்பில் அவர் இறந்தார். தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த வெளிநாட்டு ராணுவமும் இலங்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை” என்றார்.
ஜக்ரான் ஹசிம் இஸ்லாமிய தலைவர் ஜாகீர் நாயக்கின் ஆதரவாளர். அவரது பேச்சுக்களால் உந்தப்பட்டவர். அதன் அடிப்படையில் பல்வேறு உரைகளை இலங்கையில் நிகழ்த்தி வந்தார். இந்த நிலையில்தான் அவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.