லெபனான் எக்ஸ் தளம்
உலகம்

நேற்று பேஜர்.. இன்று வாக்கி-டாக்கி.. லெபனானில் தொடரும் தாக்குதல்.. விசாரணையில் வெளிவந்த புது தகவல்!

Prakash J

லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர், தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களுடன் தொடர்புடையவர்களை மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. காசாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக, தொழில்நுட்பத்தில் இஸ்ரேலின் மீறல்களைத் தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் (ஐஎஸ்டி மாலை 6 மணி) தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்தன.

இதைத் தொடர்ந்து பேஜர்களைப் பயன்படுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன. அதேபோல், தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் அவர்கள் வைத்திருந்த பேஜர்கள் வெடித்தன. மேலும், லெபனானுக்கு வெளியேயும் பேஜர்கள் வெடித்தன. மொத்தத்தில் நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் பலியாகி இருப்பதாகவும், 2,800 பேர் காயமடைந்திருப்பதாகவும், 200க்கும் மேற்பட்டவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பேஜர்கள் மர்மமான முறையில் வெடித்துச் சிதறியதன் பின்னணியில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த நிகழ்வு தொடர்பாக இஸ்ரேல் இதுவரை வாய் திறக்கவில்லை.

இதையும் படிக்க: குடும்பங்கள் கொண்டாடிய Tupperware-க்கு இப்படியொரு நிலையா? திவால் நிலைக்குச் சென்ற துயரம்!

இந்த நிலையில், இன்று (செப்.18) லெபனான் தெற்குப் பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவின் தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கிடாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், எத்தனை வாக்கி-டாக்கிகள் வெடித்தன என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. மேலும், கிழக்கு லெபனானின் பல்வேறு இடங்களில் லேண்ட்லைன் தொலைபேசிகளும் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போதைய விசாரணைகளின்படி, கையால் பிடிக்கப்பட்ட வயர்லெஸ் ரேடியோ சாதனங்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, பேஜர்கள் வாங்கிய அதே இடத்தில்தான் இவற்றையும் வாங்கியதாக புது தகவல் வெளியாகி உள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 5 ஆயிரம் பேஜர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம், இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா.. புதிய அலை உருவாக வாய்ப்பு.. அறிகுறிகள் என்ன?