மோடி, புதின், ஜெலெல்ன்ஸ்கி எக்ஸ் தளம்
உலகம்

புதின் - மோடி சந்திப்பு.. கடுமையாகச் சாடிய உக்ரைன் அதிபர்!

பிரதமர் மோடி - அதிபர் புதின் சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார்.

Prakash J

இந்தியா - ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். அங்கு மோடியை, அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மேண்டொரோவ் வரவேற்றார். விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பின்னர் தலைநகர் மாஸ்கோவுக்கு வெளியே அமைந்துள்ள ரஷ்ய அதிபரின் இல்லத்தில் பிரதமர் மோடியும், அதிபர் விளாடிமிர் புதினும் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இரண்டு தலைவர்களும் ரஷ்ய அதிபரின் இல்லத்தை சுற்றிப் பார்த்தனர். ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: ஒரு போட்டி கூட விளையாடாத வீரர்களுக்கும் ரூ.5 கோடி| ரூ.125 கோடி பரிசுத் தொகை-யார், யாருக்கு எவ்வளவு?

இதற்கிடையே பிரதமர் மோடி - அதிபர் புதின் சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “உக்ரைனில் இன்று ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளம்வயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவமனையைக் குறிவைத்து ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

இதில் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த நேரத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மும்பை| போதையில் கார் ஓட்டிய சிவசேனா தலைவர் மகன்.. வசமாக சிக்கிய மதுக்கடை பில்; முதல்வர் சொன்னதென்ன?