ஐஸ்லாந்தில் வெடிக்கும் எரிமலை கூகுள்
உலகம்

அடுத்தடுத்து வெடிக்கும் ஐஸ்லாந்து எரிமலைகள்; 50 மீட்டர் உயரத்திற்கு பாயும் லாவா குழம்புகள்!

ஐஸ்லாந்தில் அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை... கடந்த டிசம்பர் மாதம் வெடித்த எரிமலையைத்தொடர்ந்து மற்றொரு எரிமலை இன்று வெடித்து வருகிறது.

Jayashree A

ஐஸ்லாந்தில் அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை... கடந்த டிசம்பர் மாதம் வெடித்த எரிமலையைத்தொடர்ந்து மற்றொரு எரிமலை இன்று வெடித்து வருகிறது.

புவியின் வடதுருவத்தில் உள்ளது ஐஸ்லாந்த். குளிர்பிரதேசமும், பனிபாறைகள் போர்த்திய பகுதியாக இருந்தாலும் இங்கு நூற்றுக்கணக்கான எரிமலைகள் உள்ளன. இதில் 30 எரிமலைகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இப்பகுதியில் ஒரு எரிமலையானது வெடித்தது. இதிலிருந்து வெளிவந்த குழம்பானது அதிக வீரியத்துடன் வெளியேறியது. இருப்பினும் இதனால் சேதங்கள் ஏதும் இல்லை.

இதேபோல் இன்று சுந்த்னுகூர் மலைக்கு வடகிழக்கு திசையில் கிரிண்டாவிக் கடற்கரையை ஒட்டி மற்றொரு எரிமலையானது இன்று காலை 6 மணி அளவில் வெடிக்கத்தொடங்கியது என்று ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று வெடிக்கத்தொடங்கிய எரிமலையிலிருந்து வெளியேற்றப்படும் எரிமலை குழம்பு சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு பாய்வதாகவும், அதிலிருந்து வெளிவரும் லாவாவானது கிரிண்டாவிக் பகுதியின் மேற்கு நோக்கி வருகிறது என்றும் கூறப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 3800 மக்கள் வசித்து வருவதாகவும் பாதுகாப்பு கருதி, அவர்கள் ஏற்கனவே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால் எரிமலை குழம்பால் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது,

மேலும், இப்பகுதியில் இயங்கி வரும் ப்ளூ லகூன் தெர்மல் ஸ்பா மூடப்பட்டு அதில் தங்கியிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எரிமலை வெடிக்கும் முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமைமுதல் அப்பகுதியில் தொடர் நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது.