புதின் புதிய தலைமுறை
உலகம்

தொடரும் போர்... “உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்” - ரஷ்ய அதிபர் புதின்

“உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்” என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக, உக்ரைனின் கை ஓங்கி வருவதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்தது. மேலும், ரஷ்ய மக்களின் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்தி, அமைதி காண்பதற்கு இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. சமீபத்தில் ரஷ்யா சென்று பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதுபோல், ரஷ்யா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து, இருநாட்டில் அமைதி திரும்புவது குறித்து வலியுறுத்தினார். இந்தச் சூழலில், “உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்” என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Modi Putin

இதுதொடர்பாக அவர், “ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா என்று கேட்டால், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால், சில இடைக்கால கோரிக்கைகளின் அடிப்படையில் அல்ல, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளுக்கு ரஷ்யா மதிப்பளிக்கிறது. உக்ரைன் போர் தொடர்பாக இந்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்புகொண்டுள்ளேன். பிரச்னைக்கு பேச்சுவார்த்தைமூலம் தீர்வுகாண உக்ரைன் விரும்பினால் ரஷ்யாவும் தயாராக இருக்கிறது. இதற்கு இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.