அமெரிக்காவில் பார்வையற்ற பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்துவரும் சிறிய குதிரையை குணமாக்க 30000 அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் பார்வையற்ற நபர்கள் தங்களுக்கு வழிகாட்ட பயிற்சி செய்யப்பட்ட நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 10000க்கும் மேற்பட்ட வழிகாட்டி நாய்கள் பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன. வழிகாட்டுவதற்காக சிறிய ரக குதிரைகளும் பயன்படுகின்றன. அமெரிக்காவில் வழிகாட்டியாக வெறும் 6 குதிரைகளே உள்ளன. அதில் ஒரு வழிகாட்டி குதிரை தான் பாண்டா.
வழிகாட்டி நாய்கள் மற்றும் குதிரைகள் பார்வையற்ற, பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு வழிகாட்டியாக, அவர்கள் எங்கு சென்றாலும் முன் சென்று வழிகாட்டும். இதற்காக அவர்கள் அன்றாடம் செல்லும் இடங்களுக்கு அழைத்துச் சென்று நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படும். இந்த விலங்குகள் தங்கள் எஜமானர்கள் விரும்பி செல்லக்கூடிய அனைத்து இடங்களுக்கும் மிகத் துல்லியமாக கூட்டிச்செல்லும் திறன் படைத்தவை. பெரும்பாலும் குதிரைகள் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், அதற்கு செலவு அதிகமாகும், குதிரைகள் தொடர்ந்து சராசரியாக சாப்பிடக் கூடியவை, குதிரைகளுக்காக பிரத்யேகமாக தனி இடங்கள் வேண்டும் என்பதாலேயே நாய்கள் அதிகபட்சமாக வளர்க்கப்படுகின்றன.
அமெரிக்காவில் வாழும் ஆன் எடி என்ற பெண்மணி பிறவியிலேயே பார்வைத்திறன் அற்றவர். அவருக்கு கடந்த 14 ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்து வருவதுதான் பாண்டா என்ற வழிகாட்டி குதிரை. இந்நிலையில் சில காலமாக பாண்டாவிற்கு உடல்நிலை மிக மோசமாக இருந்து வந்துள்ளது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்க்கும்போது, பாண்டாவின் உணவுக்குழாயில் மிக மோசமான அடைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதுவரை சுமார் 30000 அமெரிக்க டாலர்கள் பாண்டா சிகிச்சைக்காக செலவிட்டுள்ளார், ஆன் எடியின் கணவர். மேலும் செலவு செய்ய தயாராகவும் உள்ளார்.
கடந்த 14 ஆண்டுகளாக தனக்கு பாண்டா செய்த உதவிக்கு, பாண்டாவின் சிகிச்சைக்காக, உடல் நலம் தேறி மீண்டுவர எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்கிறார் ஆன் எடி. பாண்டா எனக்கு செய்து வந்தது பேருதவி, இந்த சமயத்தில் நான் அதற்கான கைமாறாக பாண்டாவை குணமாக்க முயல்கிறேன் என்று ஆன் எடி மிகவும் உருக்கமாக கூறுகிறார்.