வியட்நாம் நாட்டின் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ட்ரூங் மை லான் என்ற 67 வயது பெண்மணி, கடந்த 2012 முதல் 2022 வரை சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான போலியான நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமாகவும் மோசடி வேலையில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது, அந்நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்குகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் அவர், 12.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி) மதிப்பிலான அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடி வியட்நாம் நாட்டின் 2022 ஜிடிபியில் கிட்டத்தட்ட 3% ஆகும்.
இந்த வழக்கை தெற்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்ட பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
வியட்நாமில் நடைபெற்று வரும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்த நிலையில்தான் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இவரின் கைதை அடுத்து, அப்போது ஜனாதிபதி பதவியில் இருந்த வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஊழல்களால் வியட்நாமில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.