உலகம்

மீண்டுமொரு ஜார்ஜ் ஃப்ளாய்ட்.. அமெரிக்காவில் தலைவிரித்தாடும் இனவெறி.. அதிர வைக்கும் வீடியோ!

மீண்டுமொரு ஜார்ஜ் ஃப்ளாய்ட்.. அமெரிக்காவில் தலைவிரித்தாடும் இனவெறி.. அதிர வைக்கும் வீடியோ!

JananiGovindhan

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை கடந்த 2020ம் ஆண்டு மினிசோட்டா மாகாணத்தில் மினியோபொலிஸ் நகரில் வைத்து அமெரிக்க போலீஸ் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கி உயிரிழக்கச் செய்த விவகாரம் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜார்ஜ் ஃப்ளாய்டை கொன்ற அமெரிக்க போலீசுக்கு எதிராக, இனவெறி தாக்குதலை கண்டித்தும் கருப்பினத்தவர்கள் மற்றும் மனிதநேய செயற்பாட்டாளர்களால் பெரும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது அப்போதைய ட்ரம்ப் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்ததால் காவல்துறையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க காவல் துறையில் என்ன சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும் இனவெறியோடு இருப்பவர்களை திருத்தவே முடியாது போல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக அதே அமேரிக்காவில் தற்போது மீண்டுமொரு கருப்பினத்தவர் போலீசால் அடித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

அதன்படி டென்னஸி மாகாணத்தைச் சேர்ந்த டயர் நிகோலஸ் என்ற 29 வயது இளைஞர் கடந்த ஜனவரி 7ம் தேதியன்று தனது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக வெளியே வந்தவர், ரெட் சிக்னலில் நிற்காமல் விதிகளை மீறி சென்றிருக்கிறார். இதனையறிந்த அப்பகுதி அமெரிக்க போலீசார் ஐவர் நிகோலஸை விரட்டிப்பிடித்து மடக்கிய பிறகு டயர் நிகோலஸ் மீது வெறிபிடித்தவர்களை போல தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

நிகோலஸின் மார்பில் போலீசார் சிலர் முழங்காலை வைத்து நசுக்கி மேலும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். இதனால் படுகாயத்திற்கு ஆளான நிகோலஸ் அங்கேயே மூர்ச்சையாகியிருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞருக்கு மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் கடந்த ஜனவரி 10ம் தேதி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இந்த விவகாரம் பூதாகரமாக அமெரிக்காவின் பல பகுதிகளில் மக்கள் நிகோலஸின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நிகோலஸை கடுமையாக தாக்கி உயிரிழக்கச் செய்த அந்த ஐந்து அமெரிக்க போலீசையும் கைது செய்திருக்கிறார்கள்.

மேலும் சம்பவம் நடந்த அன்று போலீசாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த Body Cam-ல் பதிவான காட்சிகளையும் உயரதிகாரிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். அதில், டயர் நிகோலஸை வெறித்தனமாக தாக்கியது தெள்ளத்தெளிவாக பதிவாகியிருந்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், கருப்பினத்தைச் சேர்ந்த நிகோலஸை தாக்கிய அந்த ஐந்து அமெரிக்க போலீசும் கருப்பினத்தவர்கள்தான்.

அந்த Body cam-ல் பதிவான வீடியோவில், பெப்பர் ஸ்பிரே அடித்து போலீசார் தாக்கும் போது Mom Mom என நிகோலஸ் கதறுவதும் பதிவாகியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களும், ஃபோட்டோக்களும் தற்போது அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பரவி வைரலாகி வருகிறது.

சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக இனவெறி, அதிகார வெறியில் இளைஞரை இத்தனை மூர்க்கமாக தாக்கி உயிரிழக்கச் செய்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபரான ஜோ பைடன், போலீசாரால் தாக்கப்பட்டு மரணித்த டயர் நிகோலஸின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நிகோலஸின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் பேசியதாகவும், அவர்களுக்கான நீதியை நிச்சயம் பெற்றுத் தருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.