உலகம்

’கடலில் நீந்திக்கொண்டிருந்தவரை தாக்கி விழுங்கிய சுறா’ - கரையில் நின்றவர்கள் அதிர்ச்சி!

Sinekadhara

ஆஸ்திரேலியாவில் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்த நபரை பெரிய சுறா மீன் ஒன்று கொன்று விழுங்கிய கோர சம்பவ வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடலில் நீச்சலடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை நெருங்கிய 13 அடி சுறா ஒன்று அவரை தாக்கி இரண்டாக பிளந்திருக்கிறது. பிறகு உடலின் ஒவ்வொரு பகுதியாக விழுங்கியதை அங்குள்ளவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். கடலின் அந்தப் பகுதி முழுவதுமே ரத்தமாக மாறியபோதிலும் இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ’’யாரையோ சுறாமீன் சாப்பிட்டுவிட்டது... ஓ மேன்’’ என்று கூச்சலிடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், சிட்னி நகரில்1963க்கு பிறகு நடந்த முதல் சுறா தாக்குதல் இதுதான் என்று கூறியிருக்கிறார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து நீச்சலுடையின் பாகங்களை கைப்பற்றிய போலீசார் அந்த நபர் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுறாமீன் ஒரு நபரைக் கொன்று சாப்பிட்ட வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.