உலகம்

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'உஸ்மான்' புயல்

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'உஸ்மான்' புயல்

webteam

'உஸ்மான்' புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், உஸ்மான் என்ற புயல் அண்மையில் கரையைக் கடந்தது. இதனால், மத்திய பிலிப்பைன்ஸில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் கனமழையால் லுசானில் இருந்த முக்கிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட 'உஸ்மான்' புயலால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புயல் காரணமாக பிலிப்பைன்ஸின் முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் சுமார் 20 ஆயிரம் பயணிகள் தவித்து வருகின்றனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

மேலும் 'உஸ்மான்' புயல் காரணமாக இதுவரை  68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் தாக்கத்தால் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'உஸ்மான்' புயல் தாக்கத்தால் மத்திய பிலிப்பைன்ஸில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்டு பல உயிர்களைக் காவு வாங்கிய 'உஸ்மான்' புயலால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.