எலான் மஸ்க், ட்ரம்ப், விவேக் ராமசாமி எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்ப் நிர்வாகத்தில் பதவி.. தொடக்கமே அதிரடி.. எலான் மஸ்க் பதிலடி.. விவேக் ராமசாமி சரவெடி!

எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரும் அரசு திறன் துறையின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் நேரடி ஒளிபரப்பின் வாயிலாக உரையாற்ற போவதாக தெரிவித்துள்ளனர்.

Prakash J

ட்ரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் - விவேக் ராமசாமி ஆகியோருக்கு தலைமை பதவி!

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து, அவரது அரசு நிர்வாகத்தில் அமைச்சர்கள், உயர் பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ட்ரம்ப்பின் நண்பரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் ஆகியோருக்கு, ட்ரம்ப்பின் புதிய அரசு நிர்வாகத்தில் அரசின் செயல்திறன் துறைக்கு தலைமைப் பதவி தரப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசின் செலவினத்தில் மிகப்பெரிய அளவில் நடக்கும் வீண்செலவையும், முறைகேட்டையும் அவர்கள் தடுப்பார்கள் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

அவர், “அரசுத் துறைகள் மேற்கொள்ளும் வீண் செலவுகள் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் 6.5 லட்சம் கோடி (சுமார் ரூ.135 லட்சம் கோடி) இழப்பை அவா்கள் தடுத்து நிறுத்துவார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார். அதாவது, அவர்கள் இருவரும் அமெரிக்க அரசாங்கத் துறைகளைச் சீரமைப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது உள்ளிட்ட நிர்வாக சார்ந்த கட்டமைப்பை சேர்ந்து கவனிக்க உள்ளனர். இது நிச்சயம் அரசு பணத்தை வீணடிப்பவர்களுக்கு அதிர்ச்சியை தரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: “ட்ரம்பால் போர் நிறுத்தம் உறுதி” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை!

வேலைவாய்ப்பை அறிவித்த மஸ்க் மற்றும் விவேக்கின் நிர்வாகத் துறை

இவர்களது நியமனத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அத்துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்பில், “எங்களுக்கு அதிகளவிலான பகுதிநேர யோசனையாளர்கள் தேவையில்லை. செலவுக் குறைப்பு வேலைக்கு, வாரத்தில் 80 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்ய விரும்பும் அதிக அறிவாற்றல் மிக்கவர்கள்தான் தேவை. உங்களிடம் அந்த தகுதி இருந்தால், விண்ணப்பிக்கலாம். முதலில் விண்ணப்பிக்கும் முதல் ஒரு சதவிகித விண்ணப்பங்களை எலான் மஸ்க்கும், விவேக் ராமசாமியும் நேரடியாக மதிப்பாய்வு செய்யவுள்ளனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குக் கடுமையான விமர்சனம் கிளம்பியது. இதுகுறித்து அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரென், ”ஒரு நபரின் வேலையைச் செய்ய 2 பேர் நியமிக்கப்பட்டிருப்பது என்பது எவ்வளவு திறமையானது’’ என விமர்சித்திருந்தார்.

எலான் மஸ்க்

ஆரம்பமே அதிரடி.. எலான் மஸ்க் பதிலடி!

இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், “உங்களைப் போன்று, எங்களுக்கு ஊதியம் கிடையாது; அப்படியெனில், இது உண்மையில் மிகவும் திறமையானதுதான். இந்தத் துறை அமெரிக்க மக்களுக்காக பெரிய நன்மைகளைச் செய்யும். இனிவரும் வரலாறு, நீதிபதியாக இருந்து பதில் சொல்லும்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: IND Vs SA | ஒரே ஆண்டு.. ஒரே போட்டி.. இந்திய அணி படைத்த மகத்தான 10 சாதனைகள்!

நிர்வாகம் சார்ந்து விவேக் ராமசாமி சரவெடி!

இந்த நிலையில் துறை குறித்து உரையாற்றிய விவேக் ராமசாமி, “எலான் மஸ்க்கும், நானும் வீழ்ச்சியடைந்து வரும் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறோம். எலான் மஸ்க்கை நீங்கள் எதுவரையில் அறிந்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அவர் இங்கு 'உளியை'க் கொண்டுவரவில்லை. அதற்கு மாறாக பெரிய 'வாளை'க் கொண்டுவந்திருக்கிறார். நாங்கள் அதை அந்த அதிகாரத்துவத்திற்குக் கொண்டுசெல்லப் போகிறோம். இது ஒரு புதிய விடியலின் தொடக்கம். அப்படியென்றால், நீங்கள் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் ஒவ்வோர் அடியையும் எடுத்து வையுங்கள். உங்கள் மனதில் உள்ளதை பேச நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். ஒரு சிறந்த நபர் அவரது நிறத்தை பொருட்படுத்தாமல் வேலையை பெறுவார். அரசாங்கத்தின் அளவைக் குறைப்பதும், பொதுமக்களுடன் முடிந்தவரை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதும்தான் எங்கள் இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரும் அரசு திறன் துறையின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் நேரடி ஒளிபரப்பின் வாயிலாக உரையாற்ற போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இலங்கை: தமிழர்களின் வாக்குகளை கைப்பற்றி சாதித்த ஆளும்கட்சி.. சாத்தியமானது எப்படி? வைகோ கடும் கண்டனம்