ஹண்டர் பைடன் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா| ஜோ பைடன் மகன் குற்றவாளி... நீதிமன்றம் தீர்ப்பு.. அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Prakash J

அமெரிக்கா அதிபராக இருப்பவர் ஜோ பைடன். இந்த வருட நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வுக்கும் இந்நாள் அதிபர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், டொனால்டு ட்ரம்ப் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி அபராதம் செலுத்தி வருகிறார். இந்த விவகாரம் அவருக்குத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர், அரசியல் வல்லுநர்கள்.

இதற்கிடையே ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனான துப்பாக்கி வழக்கும் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக ஹண்டர் பைடன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன்மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை ஹண்டர் பைடனுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும், தண்டனை அறிவிக்கப்படும் நாள் குறித்த விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அதிபர் தேர்தல் நடைபெறுவதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: நடுவானில் குலுங்கிய விமானம்| பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு.. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”நான் அதிபராக இருந்தாலும் அவர் எனக்கு மகன்தான். எனினும், நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில், அவர் பொய்யான காரணங்களைச் சொன்னதாலேயே தற்போது குற்றஞ்சாட்டுப்பட்டு உள்ளார். அவர் ஒரு பயங்கரமான நபர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தமிழக பாஜகவில் உட்கட்சி பூசலா? மேடையில் தமிழிசையைக் கண்டித்த அமித் ஷா.. #ViralVideo