joe biden x page
உலகம்

அமெரிக்கா | பீச்சில் நடக்க முடியாமல் தடுமாறிய ஜோ பைடன்.. உதவிய மனைவி.. #ViralVideo

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், கடற்கரையில் நடந்து செல்லும்போது, அவர் தடுமாறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது

Prakash J

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், கடற்கரையில் நடந்து செல்லும்போது, அவர் தடுமாறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சாண்டி கடற்கரையில் வார இறுதியை ஜோ பைடன் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது கடற்கரை மணலில் நடக்க முடியாமல் தடுமாறுகிறார். உடனே அவரது மனைவி ஜில் பைடன் அவருக்கு உதவி செய்து அழைத்துச் செல்கிறார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர், இப்படி தடுமாறுவது முதல்முறையல்ல. ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ’புதின்’ என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ’ட்ரம்ப்’ என்றும் தவறுதலாக கூறினார். ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்டோர் நேட்டோ உச்சிமாநாட்டின் மூன்றாம் நாள் விழாவுக்காகக் காத்திருந்தபோது, ஜோ பைடனின் தாமதமான வருகை விழாக் குழுவினரை கவலையில் ஆழ்த்தியது. அதேபோல், இத்தாலியில் நடைபெற்ற ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டின்போது, அந்நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனிக்கு விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோவும், அதே நிகழ்வில் உலகத் தலைவர்களுடன் நடந்து சென்றபோது அவர்களைவிட்டு தனியாக பிரிந்து கால்போன போக்கில் ஜோ பைடன் உலாவிய வீடியோவும் பேசுபொருளானது.

இதையும் படிக்க: ட்ரம்ப் வெற்றி | ”அமெரிக்காவில் இருந்து வெளியேறுவேன்”.. எலான் மஸ்க்கின் திருநங்கை மகள் அறிவிப்பு!

முன்னதாக, அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் நிறுத்தப்பட்டிருந்தார். வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்ட செயல்களால் ஜோ பைடன் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூன் 27ஆம் தேதி ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாதத்தினர். ட்ரம்புடன் நடந்த இந்த விவாதத்தின்போது, ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கெனவே பேசுபொருளான நிலையில், அவருடைய தடுமாற்றப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் அதிபர் தேர்தலிலிருந்தே விலகினார். அதன்பிறகே, இந்திய வம்சாவளியும் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றார்.

இதையும் படிக்க: லெபனானில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர்கள்.. தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!