அமெரிக்காவில் இறந்த பெண் கூகுள்
உலகம்

அமெரிக்கா | துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நேபாள மாணவி - அமெரிக்கவாழ் இந்தியர் கைது

அமெரிக்காவில் நேபாள மாணவி ஒருவரை அமெரிக்கவாழ் இந்தியர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Jayashree A

அமெரிக்காவில் நேபாள மாணவி ஒருவரை அமெரிக்கவாழ் இந்தியர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் ஹூஸ்டன் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேபாளத்தைச் சேர்ந்த 21 வயதான மூனா பாண்டே என்ற பெண் தங்கியுள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு படிப்பிற்காக நேபாளத்திலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று மூனா பாண்டேவை தொடர்பு கொண்ட அவரது பெற்றோருக்கு, அவரிடமிருந்து பதில் வரவில்லை என்பதால் சந்தேகம் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் மூனா பாண்டே தங்கியிருந்த குடியிருப்பு பகுதியினரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். குடியிருப்புவாசிகளும் மூனா பாண்டே தங்கியிருந்த வீட்டை திறந்து பார்க்கையில் அவர் நெற்றியில் மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

உடனடியாக குடியிருப்புவாசிகள் போலிசாரிடம் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில், 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூனா பாண்டே வீட்டிலிருந்து வெளியேறியது தெரிந்தது. அதை அடிப்படையாகக்கொண்டு போலிசாரின் தேடுதலில், பாபிசிங்ஷா என்ற 52 வயது அமெரிக்க வாழ் இந்தியரை போலிசார் கைது செய்தனர்.

இவர் குடியிருப்பு பகுதியில் உள்ள மூனா பாண்டே வீட்டிற்கு திருட சென்ற சமயம், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாபிசிங்ஷா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மூனா பாண்டேவை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து பாபிசிங்ஷாவிடம் போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே அமெரிக்காவில் உள்ள நேபாள துணைத்தூதரகம் மூனா பாண்டே பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களை இறுதி சடங்கிற்காக ஹூஸ்டனுக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.