ட்ரம்ப், மெலனியா எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா| ட்ரம்ப் மனைவி எழுதிய சுயசரிதை.. அடுத்த மாதம் வெளியீடு.. தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலனியா எழுதிய சுயசரிதை, அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

Prakash J

டொனால்டு ட்ரம்ப் மனைவி எழுதிய சுயசரிதை நூல்!

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் உள்ளார். ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. இந்த நிலையில், நியூயார்க் பிரசார கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ”எனது மனைவி (மெலனியா ட்ரம்ப்) எழுதிய 'மெலனியா' என்ற சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “எனது மனைவி, ‘மெலனியா’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். என்னைப் பற்றி நிச்சயம் அவர் நல்ல விதமாகத்தான் எழுதியிருப்பார். ஒருவேளை, என்னைப் பற்றி அவர் மோசமாக எழுதியிருந்தால், அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டாம் என்று நானே சொல்லியிருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க; ‘திருப்பதி லட்டு’ தயாரிப்பில் இவ்வளவு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கா? | 300 ஆண்டு வரலாறும்.. பின்னணியும்!

சர்ச்சையை ஏற்படுத்திய மெலனியாவின் நிர்வாண புகைப்படங்கள்!

ட்ரம்பின் மனைவியான மெலனியா, மாடலிங் துறையில் இருந்தபோது எடுத்துக்கொண்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அப்போது சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, 2000ஆவது ஆண்டில் பத்திரிகையின் அட்டைப்படம் ஒன்றுக்காக, டொனால்ட் ட்ரம்ப்புக்குச் சொந்தமான ஜெட் விமானத்தில் மெலனியா நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து பதிலளித்த ட்ரம்ப், "மெலனியா ஒரு மிகச்சிறந்த மாடலாக இருந்தவர். ஐரோப்பாவில் இதுபோன்ற புகைப்படங்கள் எல்லாம் சர்வ சாதாரணம்" என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த விவகாரம் குறித்தும் மெலனியா தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது புத்தகம் அடுத்த மாதம் அக்டோபர் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், மெலனியா எழுதியிருக்கும் சுயசரிதை புத்தகம், ட்ரம்ப்பின் அரசியல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியலாளர்கள்.

முன்னதாக, டொனல்டு ட்ரம்ப்பின் பிரசார பொதுக்கூட்டங்களில் அவரது மனைவி மெலனியா அதிகமாக பங்கேற்காதது, விமர்சனத்தை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், ட்ரம்ப் மீதான பல்வேறு பாலியல் புகார்களால் மெலனியா அதிருப்தி அடைந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கிடையே, முதல் துப்பாக்கிச் சூட்டின்போது அவர் காயமடைந்ததற்கு மெலினா கண்டனம் தெரிவித்திருந்தார்.

தற்போது, தன் மனைவி எழுதிய புத்தகம் குறித்து ட்ரம்ப் பேசியிருப்பதன் மூலம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், மகன் பரோனின் கல்லூரி கல்வி விஷயத்தில் மெலினா அதிக கவனம் செலுத்தியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ஒடிசா|பிரபல பாடகி 27 வயதில் திடீர் மரணம்.. எதிராளிகள் விஷம் கொடுத்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

யார் இந்த மெலனியா?

ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தவர் மெலனியா. 1996ஆம் ஆண்டு டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அங்கு விதிகளுக்குப் புறம்பாக மாடலிங் துறையில் பணிபுரிந்தார். இவர் ட்ரம்பை முதன்முதலில் 1998ஆம் ஆண்டு ஓர் இரவு விருந்தின்போது சந்தித்தார். அதன்பின் ட்ரம்புடைய ஆதரவால், முறைப்படி 2000ஆம் ஆண்டு விசா பெற்று அமெரிக்க குடியுரிமையும் பெற்றார்.

மெலனியாவுடன் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவி மார்லாவை விவாகரத்து செய்த ட்ரம்ப், 2005ஆம் ஆண்டு மெலனியாவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ட்ரம்ப் அதிபரானபோது, ’அமெரிக்காவில் பிறக்காத நாட்டின் முதல் பெண்மணி’ என்ற அந்தஸ்து மெலனியாவுக்கு கிடைத்தது. அரசியலில் அதிக நாட்டம் இல்லாதவராக இருந்து வந்த மெலனியா, தனது கணவருக்காக 2016 அதிபர் தேர்தலில் பிரசார பணிகளிலும் ஈடுபட்டார்.

இதையும் படிக்க: புனே|அதிக பணிச்சுமையால் இளம்பெண் மரணம்.. வைரலான தாயின் உருக்கமான கடிதம்! நிறுவன தலைவர் கொடுத்த பதில்