டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்க தேர்தல்|கூகுள் மீது குற்றச்சாட்டு.. அதிபரான பின்பு வழக்கு.. அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப்!

”தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் உள்ளார்.

ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

டொனால்டு ட்ரம்ப்

இந்த நிலையில், ”தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "கூகுள் இணையதளத்தில் என்னைப் பற்றி தேடினால், மோசமான விஷயங்களை மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பற்றி நேர்மறையான விஷயங்கள் மட்டுமே காட்டப்படுகின்றன. இது சட்டவிரோதமான செயல்பாடாகும். இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிடும் என நம்புகிறேன். இது நடக்காவிட்டால், அமெரிக்க சட்டப்படி நான் அதிபராகப் பதவியேற்ற பிறகு கூகுள் மீது வழக்கு தொடர்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் பிரசாரம்| ஹேக் செய்த ஈரானியர்கள்

முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஈரானைச் சேர்ந்த 3 ஹேக்கர்கள் தலையிடுவதாக கூறியுள்ள விசாரணைக் குழுவினர், அவர்கள் ட்ரம்ப் பிரசார குழுவை குறிவைத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

இத்தேர்தலில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தலையிடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், ஈரானைச் சேர்ந்த 3 ஹேக்கர்கள், ட்ரம்ப்பின் பிரசாரத்தை ஹேக் செய்யவும், சைபர் தாக்குதல் நடத்தவும் முயன்றனர்.

ட்ரம்ப்

ஈரானுக்காகச் செயல்பட்ட இவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து நீண்டநாட்களாக சதி செயலில் ஈடுபட்டனர். ட்ரம்ப் பிரசாரம் குறித்த தகவல்களை திருடி பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், ஜோ பைடன் குழுவினருடன் தொடர்புடையவர்களுக்கும் அனுப்பினர். ட்ரம்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்ற வகையில் இவர்கள் செயல்பட்டு உள்ளனர். ஹேக்கிங்கில் ஈடுபட வேண்டும் என்பதற்காக முழு அளவில் தயாராகி வந்துள்ளனர். அதிபர் பிரசார குழுவினருடன் தொடர்புடையவர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற இவர்கள் முயற்சித்துள்ளனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.