கமலா ஹாரிஸ் எக்ஸ் தளம்
உலகம்

கமலா ஹாரிஸ் பற்றிய புத்தகம் விற்பனையில் சாதனை.. படித்த வாசகர்களுக்கு ஏமாற்றம்; நெட்டிசன்கள் கிண்டல்!

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் உள்ளார். ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

இந்த நிலையில், ‘தி அசீவ்மெண்ட்ஸ் ஆஃப் கமலா ஹாரிஸ்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் அமேசான் விற்பனை நிறுவனத்தின் அதிக விற்பனைக்கான புத்தக வரிசையில் முதல் இடத்தில் இருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

191 பக்கங்களுடன், ஹாரிசின் வாழ்வில் நடந்த விசயங்கள், அவர் பெற்ற வாக்குகள், அவருடன் தொடர்புடைய அறிக்கைகள் மற்றும் அரசியலில் அவருடைய நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை பற்றிய விவரங்களை, உண்மையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட புத்தகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹரியானா: காங். தோல்வி.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜிலேபி.. ராகுலை விமர்சிக்கும் பாஜக.. ஏன் தெரியுமா?

எனினும், ஆர்வத்துடன் இதனை வாங்கிப் பார்த்த வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், இந்தப் புத்தகத்தில் அனைத்துப் பக்கங்களும் காலியாக உள்ளன. இடையில் மட்டும் சில பக்கங்களில் தடித்த எழுத்துகள் காணப்படுகின்றன. ஆனால், விவரங்கள் எதுவுமின்றி வெற்றுக் காகிதங்களாகவே உள்ளன. இதுபற்றி நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், 'கமலா ஹாரிசின் சாதனைகள்' என்ற பெயரில் வெளிவந்து உள்ள இந்த புதிய புத்தகம் வால்மார்ட் விற்பனை நிறுவனத்தில் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இன்னொருவரோ, ‘வெறும் 16 டாலரா? இது விலைமதிப்பற்றது’ என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “நான் இதனை பதிவிறக்கம் செய்தேன். அதனை காதில் கேட்கும்படி வாசிக்க செய்தேன். நீண்டநேரம் அமைதியாக இருந்தது. அதனால் மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இன்னொருவரோ, “விரைவாக வாசித்து முடித்துவிட்டேன். எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. கமலா ஹாரிஸ், நீங்கள் நல்ல வேலை செய்திருக்கிறீர்கள்” என வேடிக்கையாகப் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கமலா ஹாரிஸிடம் தொகுப்பாளர், பல விஷயங்கள் குறித்து விவாதித்தார். நிகழ்ச்சியின் இடையே கமலா ஹாரிஸுக்கு பீர் மதுபானம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட அவர், ’cheers’ எனக் கூறி மகிழ்ச்சியுடன் அருந்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடைசியாக, தாம் தன் கணவருடன் பேஸ்பால் விளையாட்டின்போது பீர் குடித்ததாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “வினேஷ் போகத் எங்கு சென்றாலும்..” - தேர்தலில் வெற்றிபெற்றதை கடுமையாக விமர்சித்த பிரிஜ் பூஷன் சிங்!