உலகம்

ஏமாற்றிய காதலனை 'ஆப்பிள் ஏர்டேக்'கைப் பயன்படுத்தி பின்தொடர்ந்து கொலை செய்த காதலி!

ஏமாற்றிய காதலனை 'ஆப்பிள் ஏர்டேக்'கைப் பயன்படுத்தி பின்தொடர்ந்து கொலை செய்த காதலி!

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவில் தனது காதலனை ஆப்பிள் ஏர்டேக் மூலம் ரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்த போது அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டறிந்த காதலி, ஆத்திரமடைந்து காதலன் மீது கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் கெய்லின் மோரிஸ். இவர் ஆண்ட்ரே ஸ்மித் என்பவரை காதலித்து வந்த நிலையில், காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கெய்லினுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து காதலன் ஆண்ட்ரே எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்டுபிடிக்க ஆப்பிள் ஏர்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் தனது காதலன் ஆண்ட்ரே எங்கு செல்கிறார் என்பதை 24 மணி நேரமும் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளார் கெய்லின். ஒருநாள் மதுபானக் கடை ஒன்றிற்கு ஆண்ட்ரே சென்றிருப்பது கெய்லினுக்கு தெரியவர, அந்த கடைக்கு தனது காரை எடுத்துக் கொண்டு விரைந்தார் கெய்லின். கடைக்குள் நுழைந்ததும் ஆண்ட்ரே வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கெய்லின் அதிர்ச்சி அடைந்தார்.

கெய்லின் தான் ஏமாற்றப்பட்டதாக கூச்சலிட, மதுபானக் கடையில் இருந்தவர்கள் இவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் பாட்டிலை எடுத்து கெய்லின் அந்த பெண்ணின் தலையில் அடிக்கப் போனபோது, அதை ஆண்ட்ரே தடுத்துள்ளார். பின்னர் ஆண்ட்ரேவிடம் கடுமையாக சண்டையிட்டபடி கடையை விட்டு வெளியே வந்த கெய்லின், ஆத்திரத்தில் தனது காரை வேகமாக இயக்கி காதலன் ஆண்ட்ரே மீது மோதச் செய்தார்.

கெய்லின் அங்கிருந்து தப்பிச் செல்ல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்ட்ரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏர்டேக் இல்லையென்றால் ஆண்ட்ரே காதலியிடம் சிக்கியிருக்க மாட்டார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

ஆப்பிள் ஏர்டேக் என்பது தொலைந்து போன பொருட்களைக் கண்காணிக்கப் பயன்படும் மிகவும் திறமையான சாதனமாகும். இருப்பினும், சாதனம் தொடங்கப்பட்டதிலிருந்து, எண்ணற்ற சந்தர்ப்பங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. சட்டவிரோதமாக ஒருவரை கண்காணிக்க பலர் இதைப் பயன்படுத்தியதால் சர்ச்சை எழுந்தது.

முன்னதாக பிப்ரவரியில், ஏர்டேக்குகள் மூலம் தேவையற்ற கண்காணிப்பை நிறுத்தும் புதுப்பிப்புகளை ஆப்பிள் அறிவித்தது. தெரியாத ஏர்டேக் ஒருவருடன் பயணித்தால், ஆப்பிள் பயனர்கள் எச்சரிக்கப்படும் வகையில் புது வசதியை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது.