அமெரிக்கா முகநூல்
உலகம்

அமெரிக்கா | குளிர்பானத்தை மட்டுமே கொடுத்த பெற்றோர்.. குழந்தைக்கு காத்திருந்த சோகம்!

அமெரிக்காவில் தாயொருவர் தனது 4 வயது குழந்தைக்கு தொடர்ந்து மவுண்டன் டியூவை உணவாக கொடுத்ததால், அக்குழந்தை உயிரிழந்துள்ளது. இது நிரூபிக்கப்பட்ட நிலையில், அந்த தாய்க்கு 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் ஹோப் மற்றும் தமரா பேங்க்ஸ் என்ற தம்பதியின் 4 வயது மகள் கர்மிட்டி ஹோப். குழந்தை ஹோப், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தீவிர மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, வீட்டிலேயே அப்படியே விட்டுள்ளனர். இதனால், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளார் கர்மிட்டி.

இந்நிலையில், கர்மிட்டியின் உடல் நாட்கள் செல்ல செல்ல மோசமடைய தொடங்கியுள்ளது. ஒருகட்டத்தில், கர்மிட்டியின் உடல் நீல நிறத்தில் மாறி, மூச்சு விடுவிதில் அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கர்மிட்டியின் தாய் 911-க்கு அழைத்துள்ளார். அதன்பேரில் குழந்தையை மீட்ட காவல்துறையினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு ‘குழந்தை ஏற்கெனவே மூளையில் ஏற்பட்ட நீரிழிவு தொடர்பான பிரச்னை காரணமாக உயிரிழந்துவிட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஊடகமான நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது, அவருக்கு மூளையில் நீரிழிவு நோய் முற்றிலும் பரவி மூளை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதும், சிறுமி கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏதோ ஒரு சர்க்கரை பானம் அருந்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த சர்க்கரை பானத்தால், சிறுமியின் பற்கள் அழுகிய நிலைக்கு சென்றுள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிறுமியின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்ததில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கர்மிட்டியின் பெற்றோர்கள், சிறுமி குடிக்கும் உணவு பாட்டிலில் அடிக்கடி மவுண்டன் டியூவை கலந்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து, மவுண்டன் டியூ குடித்துவந்ததால் ஊட்டச்சத்து குறைபாடும் நீரிழிவு பாதிப்பும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில், அந்தக் குழந்தையை கொலை செய்ததாத சிறுமியின் தாய் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அவர் ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 24) இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமியின் தாய்க்கு 13.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அவர் நடத்தையை பொறுத்து, இது நீட்டிக்கவும் படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தைக்கு அடுத்த மாதம் 11 ஆம் தேதி தண்டனை விதிக்கப்படவுள்ளது.

நீதிமன்ற விசாரணையில் இவர்களுக்கு இன்னும் குழந்தைகள் உள்ளதாகவும் அவர்களையும் இப்படித்தான் சித்தரவதை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். அக்குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.