சொகுசு கப்பலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேன் டோ (27) என்ற இளம்பெண், கடந்த ஆண்டு ஜனவரியில் ஏல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரின்சஸ் குரூஸ் கப்பலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் ஏல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பயணித்தனர். இந்நிலையில் கப்பலில் பயணிகளுக்கு பிரின்சஸ் குரூஸ் ஊழியர்கள் விநியோகித்த மதுவை, ஜேன் டோவும் வாங்கி அருந்தியுள்ளார்.
மதுபோதையில் சுயநினைவை இழந்த நிலையில் ஜேன் டோ கப்பலில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட ஏல நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆண் ஒருவர், மதுபோதையில் சுயநினைவை இழந்திருந்த ஜேன் டோவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் ஆணுறையைப் பயன்படுத்தி ஜேன் டோவை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆனால் வன்புணர்வின் போது ஆணுறை கிழிந்து விட்டதாகவும் நியூ யார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கப்பல் பிராயணம் முடிந்த சிறிது நாட்களுக்குப் பின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜேன் டோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்த்தபோது அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜேன் டோ அந்த அதிர்ச்சியில் பல மாதங்களாக ஒருவிதமான மன அழுத்தப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கடந்த நவம்பர் மாதத்துக்குப் பிறகே ஜேன் டோ தன்னை கப்பலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.