உலகம்

சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு - அதிபர் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு - அதிபர் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

webteam

சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் கடந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தது. கடந்த ஜூலை மாதம்  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் வரி அதிகரிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை அதிகரித்தது. 

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் குறிப்பிட்ட சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10லிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். 

கடந்த ஆண்டு 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதமே மீண்டும் வரியை உயர்த்தபோவதாக ட்ரம்ப் கூறி இருந்தார். ஆனால் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப் பேச்சு நடைபெற்றதால் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இதுவரை இரு தரப்புக்குமிடையே ஒப்பந்தம் ஏற்படாததால் ட்ரம்ப் மீண்டும் வரி உயர்வை அறிவித்துள்ளார். இது சீனா- அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. இதனிடையே சீன அதிகாரிகள் குழு நாளை மறுதினம் வாஷிங்டனில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி குறைய தொடங்கியது. இந்தாண்டு மார்ச் மாதம் இந்த மதிப்பு 47% குறைந்துள்ளது. சீனாவின் இயந்திரங்கள் மற்றும் மின்சார சாதனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்தது. அதேபோல அமெரிக்காவிலிருந்து சீனாவின் இறக்குமதியும் 17% குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மூலப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சீனா குறைத்துள்ளது.