உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியாவை தனிமைப்படும் முயற்சியாக மியான்மார் நாட்டுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வடகொரியாவுடனான கொள்கைளை தீர்மானிக்கும் அமெரிக்க பிரதிநிதி ஜோசப் யுன் மியான்மர் நாட்டிற்கு சென்று அந்நாட்டு தேசிய ஆலோசகர் ஆங் சாங் சூச்சியை சந்தித்து பேசினார். அதேபோல் மியான்மார் நாட்டு ராணுவத் தளபதியிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வடகொரியாவை தனிமைப்படுத்த அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜோசப் யுன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த 4ம் தேதி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பை நாடுவதற்காக ஜோசப் யுன் அந்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.