வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் இலங்கையில் நாளை முதல் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பு அமெரிக்க தூதரகம் தன்னுடைய ட்விட்டரில், “வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து மேலும் சில தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதை இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம். ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 ஞாயிற்றுக்கிழமை வரையில் வழிபாட்டுத் தலைங்களை தவிர்க்கவும். பெரிய அளவில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும். தொடர்ந்து கண்காணிக்கவும்” என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக, இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்து இருந்தார். அதாவது, தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் சிலர் வெடிபொருட்களுடன் வலம் வருவதாக அவர் கூறியிருந்தார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேலும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதனால், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர்.