israel ceasefire file image
உலகம்

போர் நிறுத்தத்திற்கு பச்சைக்கொடி காட்டிய இஸ்ரேல்... ஆனா ஒரு கண்டிஷன்! அது என்ன?

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் சற்று இறங்கி வந்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

யுவபுருஷ்

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கிய மோதல் இன்றுவரை நீடித்து வருகிறது. குறிப்பாக காஸாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் கடந்துள்ளது. இன்னமும், தாக்குதல் நடத்தப்படும் வடக்கு காஸா பகுதியில் இருந்து தெற்கு காஸாவுக்கு அங்கிருக்கும் மக்கள் நடந்தே செல்கின்றனர். 

இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலால், அங்கு மாபெரும் பேரழிவு நடந்து வரும் நிலையில் போரை நிறுத்துமாறு ஐநாவே கூறிவருகிறது. ஆனால், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் தங்கள் நாட்டவரை விடுவிக்காதவரை, ஹமாஸ் அமைப்பை அடியோடு அழிக்காதவரை போரை நிறுத்தமாட்டேன் என்கிறது இஸ்ரேல் ராணுவம். தங்கள் நாட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்காக சிறிது நேரம் மட்டும் போர் நிறுத்தம் செய்யலாம் என்றும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இந்நிலையில், நாள்தோறும் 4 மணி நேரம் வடக்கு காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கூடுதல் போர் நிறுத்த நேரம் தேவை என்று தான் வலியுறுத்தியதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில், முழு போர் நிறுத்தம் இருக்காது என்று கூறும் இஸ்ரேல், “வடக்கு காஸாவில் சில பகுதிகளில் சிறுசிறு போர் நிறுத்தங்கள் இருக்கும். மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கவே இந்த போர் நிறுத்தம்” என்றும் தெரிவித்துள்ளது.