அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்தச் சூழலில், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபா் ஜோ பைடன் இருந்தவரை, தோ்தலில் ட்ரம்ப்பின் கை ஓங்கியிருந்தது. ஆனால், பைடன் போட்டியில் இருந்து விலகி, கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, ட்ரம்ப்புக்கு அவா் கடும் நெருக்கடி அளிக்கும் போட்டியாளராக உருவெடுத்துள்ளாா்.
குறிப்பாக, சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, கமலா ஹாரீஸே 5 மாகாணங்களில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, ட்ரம்ப் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் பிரசார கூட்டங்களில் கமலா ஹாரிஸைக் கடுமையாகத் தாக்கி வருகிறார். குறிப்பாக, இனரீதியாக தாக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போதும் அவரை உருவரீதியாக கேலி செய்துள்ளார்.
’டைம்ஸ்’ பத்திரிகை அட்டையில் கமலா ஹாரிஸின் படம், புகைப்படமாக அல்லாமல் கையால் வரையப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், “ ‘டைம்ஸ்’ பத்திரிகை அலுவலகத்தில் கமலா ஹாரிஸின் நல்ல புகைப்படம் ஏதும் இல்லை என்று தெரிகிறது. ஆனால், அவா்களிடம் சிறப்பான ஓவியக் கலைஞா் உள்ளாா். ஏனெனில், கமலா ஹாரிஸின் உண்மையான தோற்றத்தைவிட சிறப்பாக இருப்பதுபோல அந்த அட்டைப் படம் வரையப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸை செய்தி புகைப்படக் கலைஞா்கள் பலா் படம் எடுத்திருப்பாா்கள். ஆனால், பத்திரிகையில் வெளியிடும் அளவுக்கு அவை நன்றாக இருந்திருக்காது. எனவேதான் படத்தை வரைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஜோ பைடனைவிட கமலா ஹாரிஸைவிட, தோற்கடிப்பது மிகவும் எளிதானது என நம்புகிறேன். பல முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரியைப்போல் நடந்துகொள்கிறார். அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அது ஒரு முட்டாளின் சிரிப்பைப்போல் இருக்கும். கமலா ஹாரிஸைவிட நான் அழகாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிலளித்திருக்கும் கமலா ஹாரிஸ், “இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியலைச் செய்துவரும் டொனால்டு ட்ரம்ப் ஒரு கோழை. வரும் தேர்தலில் அவரை வீழ்த்தி வெற்றிபெறுவோம்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
“என்னை எதிா்த்துப் போட்டியிட கமலா ஹாரிஸ் தகுதி இல்லாதவா். நான் பைடனுக்கு எதிராகவே தோ்தலில் களமிறங்கினேன். ஆனால், இப்போது எனக்கு எதிராக வேறு நபா் போட்டியில் உள்ளாா். அந்த கமலா ஹாரிஸ் யாா்? பைடனிடம் இருந்து தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை கமலா ஹாரிஸ் திருடிவிட்டாா். இதனால், கமலா ஹாரிஸ் மீது பைடன் கடும் வெறுப்பில் உள்ளாா்” எனக் கடந்த வாரம் கமலா ஹாரிஸை, ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.