அமெரிக்காவின் 47ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று (நவ.5) நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம் களம் கண்டனர். இதனால் போட்டி கடுமையாக இருந்தது. கருத்துக்கணிப்புகளில்கூட, கமலா ஹாரிஸே வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றார். இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், ட்ரம்புக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்த கமலா ஹாரிஸ், இறுதியில் தோல்வியைத் தழுவினார். இதனால், அவரது ஆதரவு ஆதரவாளர்கள் எல்லாம் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கமலாவின் தோல்விச் செய்தியைக் கேட்டு, அவரது ஆதரவாளர்கள் பலரும் கண்ணீர் சிந்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்ததால், அவரது பூர்விக கிராமமான தமிழகத்தில் துளசேந்திரபுரத்தைச் சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி கடந்த சில நாட்களாக கோயில்களில் வழிபாடு நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.