உலகம்

இன்னும் 4 மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

இன்னும் 4 மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

webteam

கொரோனா எனும் பெருந்தொற்று ஏற்படவில்லையெனில் உலகமே அமெரிக்கா அதிபர் தேர்தலை பற்றி தான் அன்றாடம் விவாதித்து கொண்டிருந்திருக்கும். அமெரிக்காவில் ஏற்படும் ஆட்சி மாற்றம் சர்வதேச அரசியல் போக்கையே தீர்மானிக்கும். எனவே அடுத்த அதிபர் யார்? அவரது வெளியுறவுக் கொள்கைகள் என்ன? என்பதெல்லாமே உற்று நோக்கப்படும். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

அமெரிக்காவில் தற்போது ஆட்சியில் இருக்கும் குடியரசுக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான கட்சிகள். வரும் நவம்பரில் நடைபெற இருக்கும் தேர்தலில் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்பே குடியரசு கட்சி சார்பில் மீண்டும் களம் காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபரான ஜோ பிடன் போட்டியிடுகிறார். நாட்டின் பொருளாதாரம், கொரோனாவை கையாண்ட விதம், கருப்பின மக்களின் வாழ்க்கை நிலை, குடியேற்ற கொள்கை உள்ளிட்ட அம்சங்களே அதிபர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.

ட்ரம்பை பொருத்தவரை அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார், இதனை முன் வைத்தே அவர் பரப்புரையையும் மேற்கொள்கிறார். தொடக்கத்தில் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடனுக்கு மக்கள் மத்தியில் சமமான செல்வாக்கே காணப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியது, கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட விவகாரம் மற்றும் அதன் பின் நடந்த போராட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் கையாண்ட விதம் உள்ளிட்டவை ட்ரம்பின் செல்வாக்கு சரிவடைய காரணமாக அமைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய சூழலில் அமெரிக்க ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் எல்லாம், ட்ரம்பை விட ஜோ பிடனே முந்தி இருக்கிறார். எனவே அவரே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விருவரை தவிர பிரபல பாடகரான கென்யா வெஸ்ட் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.

ஃபேஷன் வடிவமைப்பாளர், பாடகி என பன்முகம் கொண்ட பாரீஸ் ஹில்டனும் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியிருப்பதால், கொரோனா பரவலையும் மீறி அமெரிக்கா தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது