கமலா ஹாரீஸ், ஒபாமா, மிச்செல் எக்ஸ்தளம்
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் | களத்தில் நிற்கும் கமலா ஹாரீஸ்.. மவுனம் கலைத்த பராக் ஒபாமா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரீஸுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் இருந்தனர். இதில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக பார்க்கப்பட்டன. குறிப்பாக, பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் மீது மர்ம நபர் தாக்கிய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர் தப்பிப் பிழைத்தது பெரிய அளவில் பேசுபொருளானது. இதனால், ட்ரம்புக்கு ஆதரவு அலையும் அதிகரித்தது.

இந்தச் சூழலில் ஏற்கெனவே வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் ஜனநாயக கட்சி வேட்பாளரிலிருந்து அதிபர் ஜோ பைடனை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதையடுத்து, ஜோ பைடனே துணை அதிபரும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனே அறிவித்தார்.

இதன் காரணமாக, அமெரிக்க அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரீஸ், தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் வரலாறு படைத்ததுடன், டொனால்டு ட்ரம்பையும் பிரசாரங்களில் சரமாரியாகத் தாக்கி வருகிறார். அவரும் பதிலுக்கு பிரசாரங்களில் கமலா ஹாரிஸை தாக்கி வருகிறார். இதனால் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிக்க:“இந்துக்கள் காணாமல் போவார்கள்” - மேற்கு வங்க பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க பாஜக எம்பி வலியுறுத்தல்!

கமலா ஹாரீஸ் இன்னும் அக்கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அக்கட்சி மாநாட்டின்போது அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் கமலா ஹாரீஸ் வெற்றிபெற 1,976 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிட அதிக எண்ணிக்கையிலான கட்சிப் பிரதிநிதிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அத்துடன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பைவிட, கமலா ஹாரீஸுக்கு ஆதரவு பெருகிவருவதாக தற்போதைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், முன்னாள் அதிபர் ஒபாமா கமலா ஹாரீஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதிகாத்தது பேசுபொருளானது.

இதற்குக் காரணம் அவரது மனைவி மிச்செல் ஒபாமா, இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. அத்துடன், அவரும் ட்ரம்ப்-க்கு கடுமையான சவாலை அளிப்பார் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. மேலும், “இந்த அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் ஒபாமா. ஆனால், கமலா ஹாரீஸுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பது குறித்து எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில்தான், தாம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என மிச்செல் ஒபாமா தெரிவித்தார். இந்த நிலையில்தான் ஒபாமா, கமலா ஹாரீஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுபோல் அவரது மனைவி மிக்சல் ஒபாமாவும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:எல்லை தாண்டிய காதல் | காதலரை மணமுடிக்க போலி ஆவணத்தில் பாக். சென்ற இந்தியப் பெண்; விசாரணையில் அம்பலம்

இதுகுறித்து பராக் ஒபாமா தனது எக்ஸ் தளத்தில், “இந்த வார தொடக்கத்தில் மிச்செலும், நானும் எங்கள் தோழி கமலா ஹாரிஸை அழைத்து எங்கள் ஆதரவினை தெரிவித்தோம். கமலா, அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்று நாங்கள் நினைக்கிறோம். அவருக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அமெரிக்கா இக்கட்டாக இருக்கும் இந்த தருணத்தில், கமலா வெற்றிபெற, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

அதுபோல் பராக் ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “கமலாவை நினைத்து நான் பெருமை அடைகிறேன். நானும், பராக்கும் அவரை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஆதரிப்பதில் மிகவும் உற்சாகமாக உள்ளோம். அவரின் நேர்மறை சிந்தனை, நகைச்சுவை உணர்வு ஆகியவை நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் என்று நம்புகிறோம். மேலும், உங்கள் ஆதரவையும் நாங்கள் பெற்றுள்ளோம் கமலா ஹாரிஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஜூனியர்களை படுக்கவைத்து தாக்கும் சீனியர் மாணவர்கள்| வைரலான வீடியோவால் ஆந்திர அரசியலில் பரபரப்பு!