முன்னாள் அதிபர் டிரம்ப்  முகநூல்
உலகம்

அதிர்ச்சி! பரப்புரையின் போது டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு; காதுகளை உராசிய குண்டு..உயிர் தப்பினார்!

தேர்தல் பரப்புரையின்போது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தேர்தல் பரப்புரையின்போது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இரண்டு பெரும் கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் களம் காண உள்ளன. இந்தவகையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரெம்ப்பும் களம் இறங்கியுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரக்கூடிய இந்த வேலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். அப்போது, ஆதரவாளர்கள் மத்தியில் டிரெம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, டிரெம்ப்பின் மீது தீடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால்,டிரம்ப்பின் வலது காதின் மேல் துப்பாக்கியின் குண்டுகள் துளைக்கவே, தனது காதை பிடித்துக்கொண்டு டிரம்ப் கீழே அமர்ந்துள்ளார்.

உடனடியாக, அங்கிருந்த சிறப்பு பாதுகாப்புப் படையினர் டிரம்பை அங்கிருந்து எழுப்பினர். அப்போது, டிரம்பின் வலது காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அவரை காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதனால், பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், தற்போது டிரம்ப் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள சிறப்பு பாதுகாப்புப் படையினர், இந்த சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில்,”பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கப்பட்டது. இது போன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் ஒருபோதும் இடம் கிடையாது. டிரம்ப் மீதான தாக்குதலை ஒன்று சேர கண்டிக்க வேண்டியது அவசியம்.

தற்போது, அவர் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதைக் கேட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும், தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, ​​அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஜில் மற்றும் நானும் இரகசியத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில், “நமது ஜனநாயகத்தில் அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு இடமில்லை. டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டொனால்டு டிரம்பிற்கு தன் முழு ஆதரவை அளிப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்து , இந்நிகழ்வுக்கு தனது கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார். மேலும், தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைமை அதிகாரி பதவி விலக எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தன்னை துப்பாக்கி சூடுலிருந்து பாதுகாத்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தனது நன்றியை டொனால்டு டிரம்ப் பதிவு தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்வு குறித்த டிரெம்ப்பின் ஆதரவாளர் ஒருவர் தகவல் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், ”கட்டட மேற்கூரையி துப்பாக்கியுடன் ஒருவர் இருந்தது குறித்து தகவல் கூறினேன். நான் கூறிய பிறகும் அதை கண்டுக்கொள்ளாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருந்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அரசியல் களத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.