அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான சந்திப்பு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் இன்று சந்தித்துப் பேச உள்ளனர். இரு தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்துவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.
அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல விவகாரங்களில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. சிரியா, கிரைமியா உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளுமே எதிரெதிர் அணியில் அங்கம் வகிக்கின்றன. சிரியாவில் ரஷ்யா அரசுப் படைகளையும், அமெரிக்கா கிளர்ச்சியாளர்களையும் ஆதரிக்கின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரைமியா பகுதியை ரஷ்யா தனது நாட்டின் ஒரு அங்கமாக்கிக் கொண்டது அமெரிக்காவை கோபமூட்டியது. விளைவு ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை போட்டது. அமெரிக்காவும் ரஷ்யாவும் பெரும் பொருளாதார நாடுகள் என்பதால், இவற்றுக்கு இடையிலான உறவில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் வகையில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை ரஷ்யாவும், ட்ரம்புமே மறுத்துவருகிறார்கள். தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஜனநாயகக் கட்சியினர் இத்தகைய குற்றச்சாட்டை முன் வைப்பதாக ட்ரம்ப் பதில் அளித்து வருகிறார். அதிபராக பதவி ஏற்றது முதலே தனது குடியரசுக் கட்சியின் பாரம்பரிய கொள்கைக்கு எதிராக ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவதில் ட்ரம்ப் கவனம் செலுத்தி வருகிறார். உக்ரைனில் இருந்து கிரைமியாவை பிரித்து ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டதால் ஜி8 நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து அந்த நாடு விலக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த மீண்டும் ரஷ்யாவை அந்தக் கூட்டமைப்பில் இணைப்பதற்கான திட்டத்திற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரான ட்ரம்ப், ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதினை பலமுறை புகழ்ந்து பேசி இருக்கிறார். ஒபாமாவை ஒப்பிடும் போது புதின் சிறந்த தலைவர் என்று பாராட்டியுள்ளார். கடந்த மார்ச் மாதம் புதின் தேர்தலில் வெற்றி பெற்ற போது கூட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் மீறி, புதினுக்கு வாழ்த்து கூறினார். சமீபத்தில் கூட புதின் எனது எதிரி அல்ல போட்டியாளர் தான் என்று ட்ரம்ப் கூறி இருந்தார். புதினும், ட்ரம்பை புகழ்ந்து பேசி இருக்கிறார். ட்ரம்ப் திறமையான மனிதர் என புதின் கூறி இருக்கிறார். இந்தச்சூழலில் இன்று நடக்க இருக்கும் பேச்சு வார்த்தையில் ட்ரம்பும் புதினும் என்னென்ன விவகாரங்களை பேசிக் கொள்வார்கள் என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
இரு நாடுகளுமே ஆயுத தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவை என்பதால் ஆயுதக் குறைப்பு குறித்து பேசப்படும் என சொல்லப்படுகிறது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் குறித்து ட்ரம்ப் அளிக்கும் உத்தரவாதங்கள் இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை நோக்கி செல்லுமா என்பதை தீர்மானிக்கும். ஏற்கெனவே உள்ள தடைகளை ட்ரம்ப் தளர்த்துவதோ அல்லது மேற்கொண்டு தடைகள் விதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அளிப்பதோ ரஷ்யாவுக்குக் கிடைத்த வெற்றியாக அது இருக்கும். கிரைமியா விவகாரத்தில், ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைன் அரசுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா ராணுவ உதவி அளித்து வருகிறது. இது குறித்தும், சர்வதேச அமைப்புகளை சேர்ந்தவர்களை கிரைமியாவினுள் அனுமதிப்பது குறித்தும் ஒரு முடிவு எட்டப்படும் என தெரிகிறது.
சிரியா விவகாரம் இந்தச் சந்திப்பின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என கருதப்படுகிறது. சிரியாவில் அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன. சிரியாவில் ஈரானின் தலையீடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அழுத்தம் கொடுத்து வருவதால் அது குறித்து ட்ரம்ப் பேசக்கூடும். ஆனால் புதின் அதனை ஏற்பாரா என்பது சந்தேகம் தான். எனவே இன்று நடக்கும் சந்திப்பின் முடிவில் மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளது. இரு நாடுகளிடையே உறவை மீண்டும் நிலைநிறுத்துவது குறித்து இருவரும் பேசி ஒரு கருத்துக்கு வரலாம் என்று தெரிகிறது. முதல்கட்டமாக ட்ரம்பும் புதினும் மட்டுமே தனியாக சந்தித்து பேசுகின்றனர். பின்னரே அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடக்க இருக்கிறது.
ட்ரம்ப் புதின் சந்திப்பை உலகமே உற்று நோக்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்தச் சந்திப்பின் முடிவினை எதிர்நோக்கியுள்ளன. இன்றைய சந்திப்பு என்பது சர்வதேச அரசியலில் புதினுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. இரு அதிபர்கள் இடையிலான சந்திப்பு மூலம் பலம் வாய்ந்த நாடாக ரஷ்யாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர் சர்வதேச அரசியல் வல்லுனர்கள். இதற்கு முன்னரே வெவ்வேறு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ட்ரம்பும் புதினும் சந்தித்துள்ளனர். ஆனால் இன்று நடக்கும் சந்திப்பு என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படும் பேச்சுவார்த்தை. ஏற்கனவே கடந்த மாதம் ட்ரம்ப் வடகொரிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வரலாற்றில் இடம்பிடித்தார். அதே போன்றதொரு சந்திப்புதான் புதினுடனான இன்றைய சந்திப்பும். இது வெறும் சந்திப்புடன் முடிந்து போகுமா அல்லது அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்கு வித்திடுமா என்பது கேள்விக்குறிதான்.