உலகம்

பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம்: அதிரடியாக பணியை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

webteam

அதிபரானதும் பணிகளைத் தொடங்கிய ஜோ பைடன், பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய இசைவு அளிக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், தனது மனைவி ஜில்லி பைடனுடன் வெள்ளை மாளிகை வந்தார். வெள்ளை மாளிகைக்கு சிறிது தூரம் முன்பாகவே வாகனத்திலிருந்து இறங்கிய அவர், இல்லத்தரசியின் கரத்தைப் பற்றியபடியே சாலையில் நடந்து வந்தார். சாலையோரம் திரண்டிருந்தவர்களின் வாழ்த்துகளை ஏற்றபடியே நடந்த அவர், வெள்ளை மாளிகையில் அதிபராக முதல்முறையாக கால் பதித்தார்.

பின்னர் அதிபரின் அலுவலகத்தில் அலுவல்களைத் தொடங்கிய ஜோ பைடன், கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் முக்கியமாக, பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய இசைவு தெரிவித்து, பைடன் கையொப்பமிட்டார்.

புவியின் வெப்பம் அதிகரித்து வருவதைத் தடுப்பது குறித்த நடவடிக்கைகளுக்கு இணைந்து செயல்பட, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் ஆண்டு, 196 நாடுகள் கையெழுத்திட்டன. அப்போதைய அதிபர் ஒபாமா கையொப்பமிட்டிருந்த இந்த ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகுவதாக அதன் பின்னர் அதிபரான ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.