பிரையன் ஜான்சன் முகநூல்
உலகம்

வயதாகும் வேகத்தை குறைக்க பிளாஸ்மா எக்ஸ்சேஞ்ச் செய்த அமெரிக்க தொழிலதிபர்! அப்படி என்ன ஸ்பெஷல் இதில்?

ஜெனிட்டா ரோஸ்லின்

மென் பொருள் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பவர் பிரையன் ஜான்சன். 45 வயதாகும் இவரின் தந்தை, ரிச்சர்ட் ஜான்சன் (72 வயது)

கடந்த வருடம் பிரையன் ஜான்சன், தன் தந்தை ரிச்சர்டின் உடலுக்கு தன்னுடைய பிளாஸ்மாக்களை பரிமாற்றியதன் மூலம் (தந்தையின் பிளாஸ்மாக்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக தன்னுடையதை ஏற்றினார்; பின் தான் வேறொருவரிடமிருந்து பிளாஸ்மாக்களை பெற்றுக்கொண்டார்) தந்தை ரிச்சர்டின் வயதாகும் வேகத்தை 25 வருடங்களுக்கு அவரால் குறைக்க முடிந்தது.

பிரையன் ஜான்சன்

இது ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்தது என்பது ஒருபுறமென்றாலும், வயதாகும் வேகத்தை செயற்கையாக ஒருவரால் கட்டுப்படுத்த முடிகிறது என்பது அசத்தலான விஷயமாக பார்க்கப்பட்டது. இதற்கு காரணம் தன்னுடைய சூப்பர் பிளாஸ்மாக்களா... அல்லது தந்தையின் பிளாஸ்மாக்களை நீக்கியதா என தெரியவில்லை என பிரையன் ஜான்சன் கூறியிருந்தார்.

பயோ-ஹேக் என இந்த சிகிச்சை முறையை குறிப்பிட்டுள்ள பிரையன், இந்த சிகிச்சைக்காக ஆண்டுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுவதாகக் நேர்க்காணல் ஒன்றில் கூறியிருந்தார். மேலும் இதற்காக தன் தந்தை தினமும் 111 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும், எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி பகிர்ந்திருந்தார் அவர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவர் தற்போது மற்றொரு தரமான சம்பவத்தையும் செய்திருக்கிறார்.

அதன்படி பிரையன் ஜான்சன் தனது ரத்தத்திலிருந்து பிளாஸ்மாக்களை பிரித்து, அதற்கு பதிலாக அல்புமின் என்ற வேறொரு புரதத்தை தன் உடலில் ஏற்றியுள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் என்னுடைய முதல் மொத்த பிளாஸ்மா பரிமாற்றத்தை (Total Plasma Exchange - TPE) முடித்துள்ளேன். என் உடலில் உள்ள அனைத்து பிளாஸ்மாவையும் அகற்றி, அதற்கு பதிலாக அல்புமினை ஏற்றியுள்ளேன்.

TPE என்பது எனது உடலின் அனைத்து பிளாஸ்மாவையும் அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக அல்புமினை மாற்றும் சிகிச்சை முறை. கடந்த ஆண்டு நான் செய்த சிகிச்சையிலிருந்து இது வேறுபட்டது. காரணம், கடந்த முறை நான் என்னுடைய பிளாஸ்மாக்களை நீக்கிவிட்டு இன்னொரு இளைஞரின் பிளாஸ்மாக்களை பெற்றுக்கொண்டேன். இம்முறை நான் யாரின் பிளாஸ்மாவையும் பெறாமல், அல்புமினை ஏற்றிக்கொண்டுள்ளேன். இந்த சிகிச்சையின் குறிக்கோள், என் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதாகும். கூடவே என் தோல், உறுப்புகள் வயதாவதை தடுப்பதும் இதன் நோக்கங்களாக உள்ளன.

இந்த சிகிச்சையை எனக்கு செய்தவரும், TPE செய்வதில் 9 ஆண்டுகள் அனுபவும் உள்ளவருமான நிபுணர் ஒருவர் கூறுகையில், அவர் பார்த்ததிலேயே எனது பிளாஸ்மாதான் மிகவும் தூய்மையான பிளாஸ்மா என்றார். அப்படிப்பட்ட தூய்மையான பிளாஸ்மாவை தூக்கி எறிய அவரால் முடியவில்லை. இந்த உலகுக்கு அதனால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என அவர் யோசித்தார். பிளாஸ்மாவை தானம் செய்வதுகூட சாத்தியமே... அந்தளவுக்கு இதொவொரு திரவ நிலை தங்கம்!

இந்த முழு நடைமுறையையும் செய்வதற்கு 2 மணி நேரமே எனக்கு ஆனது” என்று பதிவிட்டுள்ளார்.