உலகம்

முதலாளி கொடுத்த பிறந்தநாள் 'பார்ட்டி - தேவையற்றது என கூறி 3.4 கோடி இழப்பீடாக பெற்ற ஊழியர்!

முதலாளி கொடுத்த பிறந்தநாள் 'பார்ட்டி - தேவையற்றது என கூறி 3.4 கோடி இழப்பீடாக பெற்ற ஊழியர்!

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவில் தேவையற்ற பிறந்தநாள் பார்ட்டி கொடுத்து தன்னை பீதிக்கு ஆளாக்கியதாக முதலாளி மீது ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்து ரூ.3.4 கோடி இழப்பீடாக பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தைச் சேர்ந்தவர் கெவின் பெர்லிங். இவர் அப்பகுதியில் உள்ள கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்தார். அப்போது அலுவலகத்தில் கொண்டாடப்படும் பிறந்தநாள் விழாக்கள் கெவினுக்கு பீதியை கிளப்பியுள்ளது. இதனால் கெவின் தனது மேலாளரிடம் தனது பிறந்தநாளை ஊழியர்களுக்கு வழக்கமாக கொண்டாடுவது போல் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கொண்டாட்டங்கள் தமக்கு பீதியை கிளப்புவதாகவும் சங்கடமான குழந்தை பருவ நினைவுகளை மீண்டும் தூண்டுவதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், நிறுவனம் கெவினுக்கு ஒரு ஆச்சரியமான பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்து நடத்தியது. இது அவருக்கு பீதியை தூண்டியது. உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேறினார் கெவின். அவரது காருக்குச் சென்று, ஆசுவாசப்படுத்திக் கொண்டார். பின்னர் அவரது மேலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார், மறுநாள் அலுவலகத்தில் “தனது சக ஊழியர்களின் மகிழ்ச்சியைத் திருடினார்” மற்றும் “ஒரு குழந்தைபோல நடந்துகொண்டார்” என்று கெவினை சக ஊழியர்கள் விமர்சித்துள்ளனர். அதன் பிறகு நிறுவனம் கெவினை வீட்டிற்கு அனுப்பியது.

கெவின் தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, நிறுவனத்திடமிருந்து அவருக்கு முந்தைய வார நிகழ்வுகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக மின்னஞ்சல் வந்தது. இது தொடர்பாக கெண்டக்கி நடுவர் மன்றத்தை நாடினார் கெவின். தாம் வேண்டாம் என்று கூறிய போதும் தேவையற்ற பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை நடத்திவிட்டு, தன்னை பணியில் இருந்து நீக்குவது எவ்வகையில் நியாயம் என்று கெவின் வாதாடினார்.

தீவிர விசாரணைக்கு பின்னர் நடுவர் மன்றம் கெவினுக்கு $450,000 இழப்பீடு வழங்குமாறு கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதில் $300,000 உணர்ச்சிக் கஷ்டம் மற்றும் $150,000 இழந்த ஊதியம் ஆகியவை அடங்கும். இந்திய மதிப்பில் இந்த இழப்பீட்டு தொகை சுமார் ரூ. 3.4 கோடி ஆகும். இழப்பீடு தரும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ள அந்நிறுவனம் தீர்ப்பை சவால் செய்து மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளது.