உலகம்

வேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் !

webteam

அமெரிக்காவில் வேலை விண்ணப்பத்தின் மூலம் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலையை செய்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் புளோரிடாவில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி சோண்ட்ரா பேட்டர் என்ற 68 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இந்த மூதாட்டி அவர் வேலை பார்த்து வந்த கடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தக் கொலைக்கு காரணமானவர் யார் என்று பல நாட்களாக காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்தக் கொலை நடந்த இடத்திலிருந்து கிடைத்த ஆதாரங்களை சேகரித்து காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். 

            (கொலை செய்யப்பட்ட சோண்ட்ரா பேட்டர்)

இந்த விசாரணையில் சோண்ட்ரா பேட்டர் இறப்பதற்கு முன்பு இறுதியாக ஒருவர் கடைக்கு வந்துள்ளது தெரியவந்தது. எனினும் அவரது உருவம் அவரது கை ரேகை மற்றும் ரத்த மாதிரி ஆகியவை மட்டுமே காவல்துறையினருக்கு கிடைத்தது. இதனை வைத்து அந்த நபர் யார் என்று காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்கெட்(51) என்பவர் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் பணிக்கு விண்ணப்பத்துள்ளார். இந்த வேலைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டப் பிறகு அவரது கை ரேகைகளை பரிசோதனைக்காக சமர்பித்துள்ளார். இந்த கை ரேகை 20 வருடங்களுக்கு முன் நடைபெற்ற பேட்டர் கொலையிலுள்ள கை ரேகையுடன் ஒத்துப் போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

(கைதான பார்கெட்)

இந்த தகவலை வைத்து காவல்துறையினர் கடந்த மார்ச் மாதம் பார்கெட் வீட்டிற்கு சென்று அவரது டிஎன்ஏ ஆகியவற்றை பெற்று சோதனை நடத்தினர். அதில் பேட்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த டிஎன்ஏ மாதிரியும் பார்கெட்டின் டிஎன்ஏவும் ஒன்றாக இருந்தது. இதனையடுத்து தற்போது இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலை நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.