அமெரிக்கா-ஈரான் இடையே தற்போது பதட்டமானச் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் நாடுகளின் கடந்தகால உறவை சற்று திரும்பி பார்க்கலாம்.
இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்த பிறகு அமெரிக்கா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. அத்துடன் பல நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகளில் தலையிடுவதை வழக்கமாக வைத்துள்ளது அமெரிக்கா.
அந்த வகையில் 1953ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடத்திவந்த பிரதமர் முகமது மோசாதக்கின் ஆட்சியை கலைக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் உதவின. அன்று முதல் ஈரான்-அமெரிக்கா இடையேயான எதிர்மறை உறவு ஆரம்பித்தது. ஏனென்றால் முகமது மோசாதக் ஈரானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களை அரசுடைமை ஆக்க முயன்றார். எனவே இவரை ஆட்சியிலிருந்து நீக்கினர்.
1979 மக்கள் புரட்சி வெடித்தது: -
இதனைத் தொடர்ந்து ஈரானில் மக்களிடையே புரட்சிகர சக்திகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஆதரவாளர் மற்றும் ஈரானின் மன்னர் முகமது ராசா பெஹல்வியை அந்நாட்டு மக்கள் புரட்சி செய்து ஆட்சியிலிருந்து நீக்கினர். இதனையடுத்து ஈரானின் மதத் தலைவரான ஹையத்துல்லா காமெனி ஈரான் நாட்டிற்கு திரும்பினார். இதற்குப் பின் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி இஸ்லாமிய நாடாக ஈரான் அறிவிக்கப்பட்டது.
இந்த ஈரானிய மக்கள் புரட்சியில் 52 அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாக ஈரானிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சிறை வைக்கப்பட்டனர். இந்தப் பிணைக் கைதிகளை விடுவிக்க அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தைக்கு இடையே நெருக்கடி கொடுத்து வந்தது. அதாவது அமெரிக்கா ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்தது. இறுதியில 1981ஆம் ஆண்டு 52 அமெரிக்க பிணைக் கைதிகளும் ஈரான் நாட்டு அரசினால் விடுவிக்கப்பட்டனர்.
1985-86 ஈரான்-கான்ட்ரா ஒப்பந்தம்: -
இந்த ரகசிய ஒப்பந்தத்தின்படி லெபனான் நாட்டில் ஹெசோபுல்லா பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக உள்ள அமெரிக்கர்களை விடுவிக்க ஈரான் உதவ முன்வந்தது. இதற்காக அமெரிக்கா, ஈரான் நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கும் என்று இருநாடுகளிடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா அதிபர் ரீகன் தலைமையிலான அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
1988 ஈரானின் பயணிகள் சுட்டு வீழ்த்தப்பட்டது:-
ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்மூஸ் கடல் பகுதியில் ஈரான் நாட்டு பயணிகள் விமானத்தை அமெரிக்க போர்க்கப்பல் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இந்த விமானத்தில் பயணித்த 290 பேரும் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாதி மக்கள் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் இந்தச் செயல் மீண்டும் இருநாட்டுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.
1995 ஈரான் மீது பொருளாதாரத் தடை: -
அதிபர் கிலின்டன் தலைமியலான அமெரிக்க அரசு ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடையை விதித்தது. அதன்படி அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பிற நாட்டு நிறுவனங்கள் ஈரானில் முதலீடு அல்லது தொழில் செய்தால் அவை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்படும் என்ற நிலை உருவானது.
2002 'ஆக்சிஸ் ஆஃப் எவில்' ( 'Axis of evil'):-
அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈரான், ஈராக், வடகொரியா ஆகிய நாடுகள் 'ஆக்சிஸ் ஆஃப் எவில்' நாடுகள் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்கா-ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவ தொடங்கியது.
2002 ஈரான் அணு ஆயுதங்கள் உற்பத்தி:-
ஈரானுக்கு எதிரான நாடுகள் கூட்டாக இணைந்து, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றச்சாட்டின. அத்துடன் ஈரான் உரேனியம் உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தன. இதனையடுத்து ஈரான் மீது ஐநா ,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடைகளை விதித்தனர். இதன் மூலம் ஈரான் நாட்டின் பணமதிப்பு 3இல் 2 பங்காக குறைந்தது. மேலும் ஈரான் நாட்டில் பொருளாதார நெருக்கடி உருவாகியது.
2015 அணு ஆயுத ஒப்பந்தம்:-
2013ஆம் ஆண்டு ஈரான் நாட்டு அதிபராக ஹசான் ரோஹனி பதிவியேற்றார். இவர் பதவியேற்றவுடன் அமெரிக்கா அதிபர் ஓபாமாவுடன் தொலைப்பேசியில் உரையாடினார். இதன்மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஈரான்-அமெரிக்கா இடையே உறவுகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கேற்ப 2015ஆம் ஆண்டு அமெரிக்கா, யூகே, பிரான்ஸ், சீனா,ரஷ்யா,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் அணுஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதை குறைக்கவேண்டும். மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் ஈரான் மீது உள்ள பொருளாதாரத் தடையும் நீக்கப்பட்டிருந்தது.
2018 அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்:-
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து விமர்சித்திருந்தார். அதில், “ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தம் ஒரு பக்கச் சார்பாக அமைந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிற்கு எந்தவித பயனும் இல்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து 2018ஆம் ஆண்டு ஈரான் உடன் போடப்பட்டிருந்த அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அத்துடன் ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்கா-ஈரான் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.
தற்போதைய சூழலில் அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்து வந்தாலும் அமெரிக்கா-ஈரான் இடையே போர் வர வாய்ப்பு குறைவு என்ற பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடைசியாக அமெரிக்கா கடந்த 2003ஆம் ஆண்டு மத்திய கிழக்கு பகுதியான ஈராக் நாட்டுடன் போரில் இறங்கியது. அப்போது அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்தனர். எனினும் இம்முறை ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
மேலும் ஈரான் நாட்டிற்கு ஆதரவாக ஹெஸபுல்லா (Hezbollah) அமைப்பு லெபனானிலும், ஹொவுதிஸ் (Houthis) ஏமனிலும், சிரியா அரசும் இருக்கும். எனவே ஈரான் நாட்டுடன் அமெரிக்கா போரில் இறங்கினால் அது மற்ற நாடுகளை பாதிக்கும் அபாயம் உள்ளதால் அமெரிக்கா அத்தகைய முடிவை விரைவில் எடுக்காது என்றே வெளிநாட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.