உலகம்

ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கு: காவல் அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கு: காவல் அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

JustinDurai

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் காவல் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர், டெரெக் சாவின் என்ற காவல் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கள்ள நோட்டு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார் போலீஸ் அதிகாரியான சாவின். மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சியும் காவல் அதிகாரி காலை எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோ வெளியான போது உலகம் முழுவதும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. காவல் அதிகாரி இனவெறியுடன் நடந்து கொண்டதாக பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இதனிடையே காவல் அதிகாரி டெரிக் உள்ளிட்ட 4 பேர் மீது ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 22 வருடம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து மின்னசோட்டா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் சிறையில் கண்ணியமாக நடந்து கொண்டால் தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கை அனுபவித்த பின்னர் பரோல் வழங்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.