எலான் மஸ்க் புதியதலைமுறை
உலகம்

வில்லங்கமான விவகாரத்தில் சிக்கி விமர்சனங்களை எதிர்கொள்ளும் எலான் மஸ்க்! 8 பெண்கள் இதுவரை புகார்!

எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்: 8 பெண்களும் புகார்

PT WEB

பிரபலங்கள் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது... உலகப் பணக்காரர்கள் வரிசையில் உச்சத்தில் இருக்கும் ஒருவர், வில்லங்கமான விவகாரத்தில் சிக்கி, விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்...

ஸ்பேஸ் எக்ஸ்... டெஸ்லா... இவையெல்லாம் உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்திலும் வாகன உற்பத்தியிலும் அசுரப் பாய்ச்சல் காட்டும் சர்வதேச முன்னணி நிறுவனங்கள்... இவை மட்டுமின்றி, Zip 2 உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உரிமையாளர் தான் எலான் மஸ்க்...

எலான் மஸ்க்

முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்துவதில் கில்லாடி... இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நோக்கமே, மனிதர்களை விண்வெளிக்கும் நிலாவுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்வதுதான்... பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி, அதன் பெயரை 'எக்ஸ்' என்று அதிரடியாக மாற்றியவரும் எலான் மஸ்க் தான்... ரொம்பவும் மெனக்கெடாமல், மாத்தி யோசித்து மாங்காய் அடிக்கும் மகா புத்திசாலி என பேர் போனவர்...

உலக செல்வந்தர்கள் வரிசையில் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்... வர்த்தகம் தொடர்பாக, அதிரடியான கணிப்புகளைக் கூறி, சம்பந்தப்பட்டவர்களை தெறிக்க விடுவது எலான் மஸ்க்கின் வழக்கம்... மற்றவர்களைத் தெறிக்க விட்டு, வேடிக்கை பார்த்தவரையே, இப்போது பதற வைத்திருக்கிறது சில குற்றச்சாட்டுகள்...

தொழிலதிபர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் வாடிக்கைதான் என்று கடந்து விட முடியாது... இந்த முறை, எலான் மஸ்க் குறித்து பேச வைத்திருப்பது, அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்... ஒன்றல்ல இரண்டல்ல... இதுவரை 8 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக, செய்தி வெளியிட்டுள்ளது, நியூயார்க் நகரை தலைமையகமாகக் கொண்ட 'The WallStreet Journal' எனும் தினசரி நாளிதழ்...

எலான் மஸ்க்

குற்றம்சுமத்தியுள்ள இந்த பெண்கள், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்கள்... பணிக்கான பயிற்சிக்காக சென்ற இளம்பெண்ணும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முறையில் அணுகி, உறவு கொண்டதாக கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது, 'The WallStreet Journal' நாளிதழ்...

தனக்கு அறிவார்ந்த குழந்தையை பெற்றுத் தருமாறு, அதாவது அதிக புத்திக்கூர்மையுள்ள குழந்தையைப் பெற்றுத் தருமாறு கூறி, ஒரு பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார்... குதிரைகள் வாங்கித் தருவதாகக் கூட உறுதியளித்து, ஒரு பெண்ணை எலான் மஸ்க் அணுகியதாகவும், 'The WallStreet Journal' கட்டுரை கூறுகிறது...

எலான் மஸ்க், எக்ஸ்

பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பவர்கள் பணிநீக்கம் செய்யப் படுவதாகவும், இப்போது புகார் எழுப்பியுள்ள அனைவருமே, பணிநீக்கப்பட்டவர்கள்தான் என்றும் குறிப்பிடுகிறது அந்தக் கட்டுரை...

ஏற்கனவே, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களில், ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதியம் கொடுப்பதாக விமர்சனங்கள் உள்ளன... இந்த நிறுவனங்களில், பெண்கள் தன்னியல்போடு பணியாற்றும் சூழல்இல்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற விநோதமான சூழலே நிலவுவதாகவும், குற்றச்சாட்டுகள் உள்ளன...

உலகப் பணக்காரர் பட்டியலில் உச்சத்திலேயே இருக்கும் ஒருவரின் தனிமனித ஒழுக்கம், சர்வதேச அளவில் பெண்களின் பணியிடப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது... . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் செல்வச் செழிப்பில்திளைத்து வரும் எலான் மஸ்க், பெண்களைப் போகப் பொருளாக கருதுகிறாரா என்ற சீற்றங்களும் எழுந்துள்ளன...

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் எதுவும் உண்மையில்லை என்று, எலான் மஸ்க் தரப்பில் அவரது வழக்கறிஞர் க்வின் ஷாட் வெல் மறுத்துள்ளார்...