அமெரிக்காவில் 7 வயது சிறுவன் வாஷிங் மெஷினுக்குள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ட்ராய் கோலெர் காலை 6.30 மணியளவில் காணாமல் போய்விட்டதாக சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் புகாரளித்ததற்கு கிட்டத்தட்ட 2-3 மணி நேரங்களுக்கு முன்பாக சிறுவன் காணாமல் போயிருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும், சிறுவன் காணாமல் போனபோது தந்தை மட்டுமே வீட்டில் இருந்ததாகவும், மருத்துவமனையில் வேலைசெய்யும் தாயார் இரவுப்பணிக்கு சென்றுவிட்டு திரும்பியபோதுதான் சிறுவன் காணாமல் போனது தெரியவந்ததாகவும் கூறியிருக்கிறது.
போலீசார் வீட்டிற்கு சென்றபோது தாயார் மருத்துவமனை சீருடையில் இருந்ததாகவும், கூறியிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், 2019ஆம் ஆண்டு சிறுவன் தத்தெடுக்கப்பட்டதாகவும், இதனால் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இருப்பினும் இதுவரை இந்த இறப்பில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும், யாரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
இதுதவிர Independent வெளியிட்டுள்ள செய்தியில், வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த டாப் லோடு வாஷிங் மெஷினில் இருந்து 7 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. இதுதவிர இதுகுறித்து அதிகாரிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும், மேலும் சிறுவனின் இறப்பில் சந்தேகம் இருக்கிறதா என்பது குறித்தும் எந்த விவரமும் இல்லை எனக் கூறியிருக்கிறது.
‘’என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். சிறுவன் வாஷிங் மெஷினுக்குள் போடப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு வாஷிங் மெஷினுக்குள் உடல் போடப்பட்டதா என்ற கோணங்களில் விசாரனை நடத்திவருகிறோம்’’ என்று காவல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும் வாஷிங் மெஷினுக்குள் இருந்த சிறுவனின் உடையில் எந்த சேதமும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.