அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் துறைமுகத்தை பெரிய சரக்கு கப்பல் ஒன்று கடக்க முயன்றபோது அக்கப்பல் பாலத்தின் மீது மோதியுள்ளது. இதில் பாலம் சுக்குநூறாக சில நிமிடங்களில் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி, காண்போர் மனதை பதைப்பதைக்க வைக்கிறது.
2.6 கி.மீ நீளம் கொண்ட இந்த பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் இடிந்து விழுந்ததில் பாலத்தில் இருந்த சுமார் 20 பேர், கப்பலில் இருந்த 7 தொழிலாளிகள், 5க்கும் மேற்பட்ட கார்கள் ஆற்றில் கவிழ்ந்ததுள்ளன எனக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் எதிரொலியாக பாலத்தின் இருபுறமும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த விபத்தில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு எனவும் தகவல்.
இந்தப் பாலம் 1977-ல் திறக்கப்பட்டது. வருடத்திற்கு சுமார் 11 மில்லியன் வாகனங்கள் இதை கடக்கும் எனக் கூறப்படுகிறது.