உலகம்

பிரசாரத்துக்கு இடையூறு: ரூ.345 கோடி கேட்டு கூகுள் மீது துளசி கபார்ட் வழக்கு

பிரசாரத்துக்கு இடையூறு: ரூ.345 கோடி கேட்டு கூகுள் மீது துளசி கபார்ட் வழக்கு

webteam

தனது தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, கூகுள் நிறுவனத்திடம் ரூ.345 கோடி இழப்பீடு கோரி, அமெரிக்க அதிபர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான துளசி கபார்ட் வழக்கு தொடுத்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து, அடுத்த வருடம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஜனநாயகக் கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளராக துளசி கபார்ட் போட்டியிடுகிறார். இவர், தனது பிரசாரத்துக்காகவும் நிதி திரட்டவும் தேர்தல் பிரசார குழுவைத் தொடங்கியுள்ளார். அந்த பிரசார நிறுவன விளம்பரங்கள் மூலம் துளசி எங்கு, எப்போது பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறித்த விவரங்கள் கூகுளில் வெளியிடப் பட்டது. அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான ஜனநாயக கட்சியின் முதல் சுற்று விவாதம், ஜூன் மாதம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், தனது பிரசாரத்துக்கு இடையூறு விளைவித்ததாகக் கூகுள் நிறுவனத்திடம் இருந்து ரூ.345 கோடி இழப்பீடு கோரி துளசி வழக்கு தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  ஜூன் 26, 27 தேதிகளில் எனது பிரசார விளம்பரங்களை 6 மணி நேரத்துக்கு மேலாக கூகுள் முடக்கி விட்டது. அதனால், நிதி திரட்டவும், வாக்காளர்களுக்கான செய்தியை தெரிவிக் கவும் முடியாமல் ஆகிவிட்டது. அதிகளவிலான எனது மெயில்கள் `ஸ்பாம்’ ஆக இருந்தன. முதல் சுற்று விவாதத்தில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் கூகுள் தேடுதல் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் எனது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக ரூ. 345 கோடியை கூகுள் தர வேண்டும்’ என்று கூறப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூகுள் செய்தி தொடர்பாளர் ஜோஸ், ``சந்தேகத்தின் அடிப்படையில் அவரது விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. பிறகு, சிறிய இடைவெளிக்கு பின் அது சரி செய்யப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.