’டேஸ்ட் அட்லஸ்’  முகநூல்
உலகம்

இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவுகளுக்கான பட்டியலில் உப்புமாவுக்கு எந்த இடம் தெரியுமா?

சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த ’டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு இந்தியாவில் ‘அதிகம் விரும்பப்படும் உணவுகளின் பட்டியல்’ மற்றும் ‘அதிகம் ஒதுக்கப்படும் உணவுகளின் பட்டியல்’ ஆகியவற்றை தயார் செய்து வெளியிட்டு இருந்தது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உணவு என்பது மக்களின் உணர்ச்சிகளின் அங்கமாகி விட்டது. கோபத்தை வெளிப்படுத்தவும் உணவு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் உணவு, அழுகையை வெளிப்படுத்தவும் உணவு என்றுதான் நம்மில் பலரும் இருக்கிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்பதால் இங்கே பல மொழிகளை பேசும் மக்கள் உள்ளது போலவே, இடத்திற்கு ஏற்றவாறு உணவுகளும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

food

வகைவகையான உணவுகளுக்கிடையே, ஒரே ஒரு உணவை மட்டும் வைத்து ஒரு டிரெண்டிங் மீமையே உருவாக்கலாம் என்றால் அது உப்புமாவை வைத்து மட்டும்தான் முடியும்... இதை ஏன் இப்போது சொல்கிறோம் என யோசிக்கின்றீர்களா?

வேண்டாம் என வெறுக்கப்படும் உணவுகள்:

அதாவது சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த ’டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு ‘இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுகளின் பட்டியல்’ மற்றும் ‘அதிகம் வேண்டாம் என்று ஒதுக்கப்படும் உணவுகளின் பட்டியல்’ ஆகியவற்றை ஆய்வின்மூலம் கண்டறிந்து வெளியிட்டு இருந்தது. அதில், இந்தியர்கள் அதிகம் வெறுக்கும் உணவுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் உப்புமா இடம்பெற்றுள்ளது.

இதில் நாம் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உப்புமாவிற்கு மேல் ‘பெரிதும் வெறுக்கப்படும் உணவு’ வகைகளில், இன்னும் 9 உணவு வகைகள் உள்ளன...! ‘அதென்னப்பா அது, எனக்கே தெரிஞ்சுக்கணும் போல இருக்கு’ என்கின்றீர்களா? சொல்றோம்..

முதலாவது இடத்தில் ஜல் ஜீரா உள்ளது. இது சீரகம், புளி, புதினா மற்றும் பிற மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான இந்திய கோடைகால பானமாகும். இது அதன் குளிரூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்றது மற்றும் வெப்பத்தை ஈடுகட்டவும் செரிமானத்திற்கு உதவவும் அடிக்கடி உட்கொள்ளப்படுகிறது.

இதனை தொடர்ந்து கஜக், தேங்காய் சாதம், பண்டா பட், அலூ பய்ங்கன், தண்டை, அச்சப்பம், மிர்ச்சி கா சலன், மல்புவா உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. நம்மூர் உணவுகளாக தேங்காய் சாதம் இப்பட்டியலில் மட்டுமே உள்ளது. மற்றபடி உப்புமா ஹேட்டர்ஸ்தான் அதிகம்!

விரும்பப்படும் உணவுகள்:

தொடர்ந்து பெரிதும் விரும்பும் உணவுகளின் பட்டியலில், மேங்கோ லஸி முதலிடத்திலும், இதனை தொடர்ந்து சாய் மசாலா, பட்டர் கார்லிக் நான், தந்தூரி போன்றவை இடம்பெற்றுள்ளன. அதிலும், பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் பிரியாணி 6 ஆவது இடத்தை பெற்றுள்ளது சற்று வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.