உலகம்

கருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பதட்டம்..!

கருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பதட்டம்..!

JustinDurai
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான அதிகாரவர்க்கத்தின் வன்முறைகள் தொடர் கதையாகவே உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் 29 வயதான டிஜான் கிஸ்ஸி, கடந்த திங்கள்கிழமை அன்று சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது, இரண்டு காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அவரைத் தடுக்க முயன்றுள்ளனர்.
கிஸ்ஸி முதலில் சைக்கிளுடன் நிறுத்தாமல் சென்றதாகவும், பின்னர் அவரைத் துரத்திய அதிகாரிகளில் ஒருவரை முகத்தில் குத்து விட்டதாகவும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை தாக்க முயன்றபோது, பாதுகாப்புக் கருதி போலீஸ் சுட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
ஆனால் கிஸ்ஸியின் நண்பர்கள் இதை முற்றிலும் மறுத்துள்ளதுடன், அவரிடம் ஆயுதம் இருந்தது என கூறுவதே பச்சைப்பொய் எனவும், போலீசாரிடம் சிக்காமல் சென்றதால், ஆத்திரத்தில் கிஸ்ஸியின் முதுகில் சுட்டதாகவும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாகவும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, கிஸ்ஸி , சைக்கிள் ஓட்டுதலில் எந்த விதிமுறையை மீறியிருக்கிறார் என்று காவல்துறை வெளியிடவில்லை. சம்பந்தப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் குறித்தும் எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. ஆனால், அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, இரண்டு போலீஸ்காரர்களும் வெள்ளையர்கள் என தெரியவந்துள்ளது.
டிஜோன் கிஸ்ஸி கொல்லப்பட்டதை கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.