உலகின் மிகப்பெரிய சட்டவிரோத இணையதளமான ஆல்பாபே மார்க்கெட் இணையதளத்தை முடக்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
போதைபொருள் விற்பனை, கம்யூட்டர்களை ஹேக் செய்யும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளின் ஹப்பாக செயல்பட்டு வந்த ஆல்பாபே (AlphaBay) இணையதளம் முடக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. கள்ளச் சந்தை போலவே இணையத்தின் கறுப்பு பக்கமே டார்க் வெப் என்றழைக்கப்படுகிறது. டார்க் வெப் மூலம் போதைப் பொருட்கள் உட்பட சட்டவிரோதமான பொருட்கள் விற்கப்படுகின்றன. இணையத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் விதித்துள்ள சட்டதிட்டங்களுக்கு இந்த டார்க்வெப் கட்டுப்பாடுவதில்லை. கண்டு கொள்வதில்லை. அந்த டார்க் வெப் மூலம் செயல்பட்டு வந்த ஆல்பாபே இணையதளம் கடந்த ஜூலை 4ம் தேதி முதல் முடக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ், ஆல்பாபே இணையதளம் மூலம் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் போதைபொருள் பயன்பாடு அதிகரிப்பதற்கு முக்கியமான காரணியாக இது விளங்கியது. டார்க் நெட் என்பது ஒளிந்துகொள்ளும் இடமல்ல என்று குறிப்பிட்டார். வரலாற்றில் மிகப்பெரிய டார்க் நெட் சந்தையாக விளங்கிய அந்த இணையதளத்தை முடக்கியது, இந்தாண்டின் மிகப்பெரிய கிரிமினல் ஒழிப்பு நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல நெதர்லாந்தில் இருந்து செயல்படும் ஹன்ஸா மார்க்கெட் எனும் மற்றொரு டார்க் நெட் சந்தையும் முடக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.